சிறுபாக்கம்:
சிறுபாக்கம் அருகே வன விலங்குகளால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது. சிறுபாக்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் வனப்பகுதியில் மான், மயில், எறும்புத் தின்னி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் வனவோரத்தில் பயிர் செய்யப்படும் கரும்பு, மரவள்ளி, பருத்தி, மணிலா, மக்காச் சோளம் ஆகியவற்றை தின்றும், அழித்தும் நாசம் செய்து வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு கோரி வனவோர விவசாயிகள், மாவட்ட வன அலுவலர் கீதாஞ்சலி, வனவர் மோகனசுந்தரம் ஆகியோரிடம் முறையிட்டனர். இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவின்படி, வன விலங்குகளால் பாதித்த 75 வனவோர விவசாயிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக ஒதுக்கப்பட்டது. இத்தொகையினை நேற்று முன்தினம் வனவர் சுப்புராயன் தலைமையில், வனவோர விவசாயிகள் சங்கத் தலைவர் சுப்ரமணியன், 75 விவசாயிகளுக்கும் வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக