சிதம்பரம்:
காவிரி கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உளுந்து அறுவடை துவங்கியுள்ளது. விதை கிடைக்காதது, பருவம் தவறிய மழை, தண்ணீர் தாமதம் போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் சில ஆண்டாக பருவம் தவறிய மழை, வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடியையே முழுமையாக நம்பியுள்ள நிலையில் அந்த பருவமும் சில நேரங்களில் பொய்த்துவிடுவதும் உண்டு. அந்த நேரங்களில் சம்பா பயிரில் ஊடுபயிராக விதைக்கப்படும் உளுந்து பயிர், நெல்லில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் வருமானம் கிடைக்கிறது.
மாவட்டத்தில் 88 சதவீதம் நெற்பயிரில் ஊடுபயிராகவும் (சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்), இரண்டு சதவீதம் பாசன பயிராகவும் (கடலூர், பண்ருட்டி), 10 சதவீதம் மானாவாரியாகவும் (திட்டக்குடி) பயிரிடப்படுகிறது. மொத்தம் ஒரு லட்சத்து 35,000 ஏக்கரில் உளுந்து பயிரிடப்படுகிறது. அதன் மூலம் 27,170 டன் உளுந்து உற்பத்தி கிடைத்து வந்தது. உளுந்து சாகுபடி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது துவங்கி மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படும். காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்படும் காலத்தில் உளுந்து பயிர் செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு காலதாமதமாக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்ததால் தாமதமாக நெற்பயிர் சாகுபடி துவங்கியது. அதனால் உளுந்து பயிரை உரிய பருவத்தில் பயிர் செய்ய முடியவில்லை. அத்துடன் அரசு விதை பண்ணைகள் மூலம் வழங்கப்படும் உளுந்து விதை கிடைக்கவில்லை. மேலும் நெல் அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் இயந்திரம் மூலம் அறுவடை செய்ததால் உளுந்து பயிர் அழிந்துவிடும் என்பதால் அதிகமான விவசாயிகள் உளுந்து விதைக்கவில்லை. அத்துடன் ஜனவரி மாத இறுதியில் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்திவிடுவதால் உளுந்து பயிருக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடுகிறது.
இதுபோன்ற காரணங்களால் மாவட்டத்தில் உளுந்து பயிர் சாகுபடி செய்வது ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. இந்தாண்டு உரிய காலத்தில் 70,000 ஏக்கரும், தாமதமாக 10,000 ஏக்கர் மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளது. இவையும் பருவம் தவறி பயிரிட்டதால் போதிய விளைச்சலின்றி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். படாத பாடுபட்டு பல்வேறு சிரமங்களுக்கிடையே உளுந்து அறுவடை செய்த சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் தவிக்கின்றனர். பண்ருட்டி, விருத்தாசலத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் உள்ளது. பண்ருட்டியில் குறைந்தபட்சம் 4300ல் இருந்து 4700 வரையும், விருத்தாசலத்தில் 4700 முதல் 4900 வரையும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இல்லாததால் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உளுந்து பயிர் சாகுபடி பற்றி ஆய்வு செய்ய கடந்த வாரம் சிதம்பரம் பகுதிக்கு வந்த வேளாண் உற்பத்தி ஆணையர் நந்தகிஷோர், இயக்குனர் கோசலராமன் ஆகியோரை, உழவர் மன்ற தலைவர் ரவீந்திரன் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து, உளுந்து பயிர் பாதிப்பு குறித்தும், விவசாயிகளுக்கு உளுந்து பயிர் சாகுபடி ஆர்வத்தை பெருக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்றும், சிதம்பரத்தில் உழவர் சந்தையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் நெற்பயிரில் விவசாயிகளுக்கு போதுமான வருமானம் கிடைக்காத நிலையில், நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் உளுந்து சாகுபடியை பெருக்க ஜனவரி 28க்கு பிறகு உளுந்து பயிருக்கு தனியாக தண்ணீர் திறந்துவிட்டு மாவட்டத்தில் ஏகபோக உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக