கடலூர் :
ரங்கநாதபுரம் ஊராட்சியில் மீன் மார்க்கெட் கட்டித்தரப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட நாகம்மாபேட்டை, கோதண்டராமபுரம், அனுக்கம்பட்டு, அகரம், ஆயிக்குப்பம், ரங்கநாதபுரம், கண்ணாடி, விருப்பாட்சி, ஆடூர் அகரம் ஆகிய ஊராட்சிகளில் அமைச்சர் பன்னீர்செல்வம் பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இக் கிராமங்களில் இருந்து 2,631 மனுக்களை பெற்றார்.
குறிப்பாக ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அரசவல்லிக்கு பட்டா வழங்கவும், அனுக்கம்பட்டு கிராமத்தில் மாற்றுத் திறனாளிகள் வினோத்குமார், விஸ்வா, பாலமுருகனுக்கு உடனடியாக பள்ளியில் படிக்கவும், ரங்கநாதபுரம் இந்துமதிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் உத்தரவிட்டார்.
பின்னர் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில்
'தமிழக முதல்வர் மாற்று திறனாளிகளுக்கென துறையை உருவாக்கியவுடன் அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு நம்பிக்கையுடன் உள்ளனர். ரங்கநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த 21 பேர் தொகுப்பு வீடுகளை பழுது பார்த்து தரவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கி சரி செய்யப்படும். மேலும் மீன்மார்க்கெட் ஒன்றும் கட்டித்தரப்படும்' என்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, பி.ஆர்.ஓ., முத்தையா பங்கேற்றனர்.
downlaod this page as pdf