உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

நெரிசல் மிகுந்த கடலூர் முதுநகர் சாலை விரிவுபடுத்த கலெக்டர் நேரில் ஆய்வு

 கடலூர் : 

             போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ள கடலூர் முதுநகர் சாலையை விரிவுபடுத்துவது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
 
                   கடலூர் முதுநகரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டியே (கடலூர் - சிதம்பரம் சாலையில்) காய் கறி மற்றும் மீன் மார்க்கெட் உள்ளது. நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பால் குறுகலாகியுள்ள இந்த சாலையில மூன்று இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட், கார் மற்றும் வேன் ஸ்டாண்டுகள் உள்ளன. மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தி மூட்டைகளை இறக்குவதாலும், கடைகளில் பொருள் வாங்க வருபவர்கள் தங் களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி சிக்கிக் கொள்வது வாடிக்கை.
 
              போக்குவரத்து நெரிசலில் பல முறை சிக்கிய கலெக்டர், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.  அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை நெடுஞ் சாலை, நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷன் முதல் மணிகூண்டு வரை சாலையை அளவீடு செய்யும் பணியை பார்வையிட்டார்.  பின்னர் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை ஒழுங்குபடுத்தி அதன் மீது கான்கிரீட் தளம் அமைத்து அந்த இடங்களில் வேன், கார் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டிற்கு இடம் ஒதுக்கவும், ஒரு பகுதியை இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்ய ஆலோசனை வழங்கினார்.
 
            மேலும் சாலையின் இருபுறமும் தலா இரண்டு கனரக வாகனங்கள் செல்லும் வகையில் 19 மீட்டருக்கு அகலப்படுத்தவும், மார்க்கெட் எதிரில் உள்ள சாலை தடுப்பு கட்டையை அகற்றி சாலையின் மையத்தில் கட்டவும், மணிகூண்டு அருகே உள்ள பஸ் ஷெல்டரை மேற்கு பகுதியில் தள்ளி அமைக்கவும், இந்த ஷெல்டருக்கு பஸ்கள் வந்து செல்ல தனி வழி அமைக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரித்து கொடுக்க நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
 
                  மேலும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை இடித்துவிட்டு புதிதாக கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர். ஆய்வின்போது எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன், தாசில்தார் தட்சணாமூர்த்தி மற்றும் நெடுஞ்சாலை, நகராட்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior