உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

இடிந்து விழுந்தது ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ராஜகோபுரம்


விரிசல் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ராஜகோபுரம். புதன்கிழமை இரவு இடிந்து விழுந்த ராஜகோபுரம்.
   

                திருப்பதிக்கு அருகிலுள்ள ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது.

                  கோபுரம் இடிந்து விழுந்தபோது கோபுரத்துக்கு அருகில் இருந்த பக்தர்கள் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஸ்ரீகாளஹஸ்தியில் ஸ்ரீகாளஹஸ்தி ஞானப்பிரசுன்னாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. கோயிலின் ராஜகோபுரம் 136 அடி உயரம் கொண்டது. இந்த ராஜகோபுரத்தில் கடந்த 1988-ம் ஆண்டு லேசான விரிசல் ஏற்பட்டது. இதனால் கோபுரத்திலிருந்த சில சிற்பங்கள் உடைந்து விழுந்தன. இதையடுத்து சேதமடைந்த பகுதிகள் ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டன. இந்த நிலையில் ராஜகோபுரத்தில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அந்த விரிசல் சரி செய்யப்படவில்லை. இதனால் விரிசல் பெரிதாகி கோபுரத்தின் உச்சி வரை சென்று விட்டது. இந்த நிலையில் புதன்கிழமை காலை கோபுரத்தின் விரிசல் பெரிதாகி கோபுரம் இரண்டாகப் பிளந்துவிட்டது. இதனால் ராஜகோபுரம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோயிலுக்குள் பக்தர்கள் யாரையும் கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் புதன்கிழமை இரவு கோயில் ராஜகோபுரம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.÷இதையடுத்து கோயிலின் அருகில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் கோபுரத்தின் இடிபாடுகளில் சிலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.சம்பவம் அறிந்ததும் சித்தூர் மாவட்ட ஆட்சியர் வி. சேஷாத்ரி ஸ்ரீகாளஹஸ்திக்கு விரைந்தார். ராஜகோபுர இடிபாடுகளை அகற்றுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

விசாரணைக்கு முதல்வர் உத்தரவு: 

               ஸ்ரீகாளஹஸ்தி கோயில் கோபுரம் இடிந்து விழுந்த செய்தி அறிந்ததும் ஆந்திர மாநில முதல்வர் கே. ரோசையா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதே இடத்தில் புதிய ராஜகோபுரம் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறநிலையத்துறை அமைச்சர் ஜி. வெங்கடரெட்டிக்கு முதல்வர் உத்தரவிட்டார்.மேலும் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

5-ம் நூற்றாண்டு கோயில்:  

              இந்தக் கோயில் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் கி.பி. 1516-ம் ஆண்டில் விஜய நகரப் பேரரசின் கிருஷ்ணதேவராய மன்னரால்தான் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டது. பஞ்சபூத தலங்களில் இக்கோயில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோயிலாகவும் இது விளங்கி வருகிறது. தென் கைலாசம் என்றும் இந்தக் கோயில் அழைக்கப்பட்டு வந்தது. பெண்ணாறு ஆற்றின் கிளை ஆறான ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் இந்த கோயில் அழகுற அமைந்துள்ளது. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலத் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். சமீபத்தில் கூட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா ஆகியோர் கோயிலுக்குச் சென்றிருந்தனர். 

லைலா புயல் காரணமா? 

                 ராஜகோபுரம் இடிந்ததற்கு லைலா புயல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஸ்ரீகாளஹஸ்தி கோயில் கோபுரத்தின் விரிசல் அதிகமாகிக் கொண்டே போனதால் சென்னையிலிருந்து ஐஐடி பேராசிரியர், திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆலோசகர் பேராசிரியர் நரசிம்மன், புவியியல் வல்லுநர் ராம்மோகன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்தனர்.விரிசல் ஏற்பட்டிருந்த பகுதியில் அவர்கள் ஆய்வு நடத்திவிட்டுச் சென்றனர். சமீபத்தில் ஆந்திரத்தைத் தாக்கிய லைலா புயலால் ராஜகோபுரத்தின் விரிசல் மேலும் அதிகமாகியிருக்கலாம் என்றும் அந்தக் குழுவினர் கூறியதாகத் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior