கடலூர்:
உலக வெப்பமயமாதலை தடுக்கவும், மின் சிக்கனத்தை கடைபிடிக்கவும் மின் வாரியம் சார்பில் மானிய விலையில் சி.எப்.எல்., பல்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் வெப்பமயமாதலை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் தமிழ்நாடு மின்சார வாரியம், பல்புகளால் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதற்காக பரிட்சார்த்த முறையில் தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக இம்மாவட்டத்தில் வெப்பத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளவிருக்கின்றன. அதன்படி, வீடுகளில் போடப்பட்டுள்ள குண்டு பல்புகளுக்குப் பதிலாக (டி.என்.இ.பி., பொறிக்கப்பட்ட) சி.எப்.எல்., பல்புகளை அரசு வழங்க முடிவு செய்துள்ளது. தற்போது 6 வாட்ஸ் முதல் 30 வாட்ஸ் வரை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள இவ்வகை பல்புகள், 30 முதல் 275 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற பல்புகள், 40 வாட்ஸ் டியூப் லைட் எரியும் வெளிச்சத்திற்கு 18 வாட்ஸ் உள்ள சி.எப்.எல்., பல்புகள் சமமாகும். அதே நேரத்தில் சி.எப்.எல்., பல்புகள் வெப்பத்தை வெளியிடாது. இந்த பல்புகளை மின் வாரியம், 15 ரூபாய்க்கு மானிய விலையில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.
அதன்படி, வீடுகளில் போடப்பட்டுள்ள குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, மானிய விலையில் கிடைக்கும் சி.எப்.எல்., பல்புகளை வாங்கி போட்டுக் கொள்ளலாம். இதை எக்காரணம் கொண்டும் வீட்டின் உரிமையாளர்களோ, வாடகைக்கு குடியிருப்பவர்களோ கழற்றி சென்று விட முடியாது. இதற்காக ஒவ்வொரு வீடுகளில் எத்தனை குண்டு பல்புகள் உள்ளன என்பது குறித்து மின் வாரியம் சர்வே எடுக்கும் பணியில் இறங்கியுள்ளது. இப்பணி முடிந்ததும், சி.எப்.எல்., பல்புகள் உபயோகப்படுத்தும் வீடுகளுக்கு மட்டும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. டியூப் லைட் உபயோகப்படுத்துபவர்களுக்கு இச்சலுகை கிடையாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக