உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

மீண்டும் கட்டப்படுமா பாண்டியநாயகம் கோயில்?


சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பாண்டியநாயகம் கோயிலின் வெளிப்புறத் தோற்றம், இடிக்கப்பட்ட கோயில் மண்டபத்தின் சுவர்கள்
சிதம்பரம்:

             சிதம்பரம் நடராஜர் கோயிலில் இடிக்கப்பட்ட பாண்டியநாயகம் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் மீண்டும் கட்டப்படுமா என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் வடக்குகோபுர வாயில் அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற பாண்டியநாயகம் கோயில் என்கிற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில். மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கி.பி. 1216-1251 -ல் இக் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வள்ளி தெய்வானை உடன் மயில்மீது அமர்ந்த நிலையில் சுப்பிரமணியசுவாமி காட்சி தரும் கோயிலாகும் இது. இக் கோயிலின் முகப்பில் தேர் உருளைகள், யானைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலய மண்டபத்தில் உட்புற மேல்பகுதியில் கந்தபுராணச் சிற்பங்களும், திருமுறை ஆசிரியர்கள் திருஉருவங்களும் தீட்டப்பெற்றிருக்கும். இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா 10 நாள்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு திருப்பணி செய்யப் போவதாக கூறி, கோயில் கருவறையை தவிர மிக அழகான வேலைப்பாடுகளும், ஓவியங்களும், சிற்பங்களும் அமைந்த வெளி மண்டபம் முற்றிலும் இடிக்கப்பட்டது. கோயிலை சுற்றியிருந்த அழகிய நந்தவனமும் அழிக்கப்பட்டது. 

                  எவ்வித சேதமின்றி இருந்த பழமைவாய்ந்த கோயில் மண்டபத்தை ஏன் இடித்தார்கள் என தெரியவில்லை. மண்டபத்தை இடித்து இந்த ஆலயத்தை மூடிவைத்துள்ளதால் கடந்த ஓராண்டாக எவ்வித பூஜையும் நடைபெறவில்லை. அதேவேளையில் திருப்பணிகளும் நடைபெறவில்லை. இதனால் முருக பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடராஜர் ஆலயத்தை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கையகப்படுத்திய பின்னர் பாண்டியநாயகம் கோயில் திருப்பணி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

தீர்ப்பு வந்தவுடன் திருப்பணி 
  
கோயில் செயல் அலுவலர் க.சிவக்குமார் கூறியது: 

                  இந்து அறநிலையத்துறை கையகப்படுத்திய பின் 13-வது நிதிஆணையம் மூலம் கோயில் முழுவதும் திருப்பணி செய்ய ரூ.38 கோடி நிதிஒதுக்கீடு கோரி அனுமதி பெற்றது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அறநிலையத்துறையினர் திருப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தீர்ப்பு வந்தவுடன் திருப்பணி தொடங்கும் என்றார்.

ஆலய தீட்சிதர்கள் தரப்பில் கூறுகையில், 

             கோயிலின் மண்டபம் சிதிலமடைந்ததால் இடித்துவிட்டு புதிய மண்டபம் கட்டி குடமுழுக்கு செய்வது என பொதுதீட்சிதர்களால முடிவு செய்யப்பட்டு இடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்து அறநிலையத் துறையினர் கையகப்படுத்தியதால் பணிகள் தொடங்க முடியாமல் போனது. தற்போது உச்சநீதிமன்ற தடை உள்ளதால் பணிகளை தொடர முடியவில்லை. தடை நீங்கியவுடன் திருப்பணி நடைபெறும் என்றனர். தொன்றுதொட்டு பூஜைகள் நடைபெற்று வந்த இக் கோயில் மூடப்பட்டுள்ளது பக்தர்களுக்கு மிகவும் வேதனையை தந்துள்ளது. இக் கோயிலில் விரைந்து திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பக்தர்களின் கோரிக்கை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior