
சாதனை மாணவி(வலமிருந்து 3-வது) ஜாஸ்மினுடன் பெருமையைப் பகிர்ந்து கொள்ளும் தாயார் மற்றும் தந்தை(வலமிருந்து 4-வது). உடன் மகிழ்ச்சியில் திளைக்கும் தோழிகள்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த திருநெல்வேலி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தவிர 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 494 மதிப்பெண்களை 4 பேரும், 493 மதிப்பெண்களை 11 பேரும் பெற்றுள்ளனர். மொத்தம் 16 மாணவ, மாணவியர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். மாநில பாட திட்டத்தில் தேர்வெழுதிய 9,67,420 பேரில் 6,96,704 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 82.5 சதவீதமாகும்.
கணித புலிகள் குறைவு:
கணிதத்தில் 2,399 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 5,112 பேர் 100 மதிப்பெண் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரேங்க் பட்டியல் மற்றும் தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகளே சிறப்பு சேர்த்துள்ளனர். 3,68,940 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 85.5 சதவீதம். 3,27,764 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 79.4 சதவீதமாகும். அறிவியல் பாடத்தில் 1,310 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 467 பேரும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தொடர்ந்து மாணவிகள் சாதனை: முதல் இடத்தை திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாஸ்மின் என்ற மாணவி பெற்றுள்ளார். 494 மதிப்பெண்களுடன் 4 பேர் இரண்டாம் இடத்தையும், 493 மதிப்பெண்களுடன் 11 பேர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளவர்களில் 11 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரிகுலேஷன்:
மெட்ரிகுலேஷன் பாட திட்டத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.பவித்ரா 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். சென்னை (முகப்பேர் மேற்கு) வேலம்மாள் பள்ளி மாணவி ஜி.ஸ்ரீவந்தனா 493 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், பொன்னேரி பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவி டி.லாவண்யா 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த இருவரும் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்து சிறப்புச் சேர்த்துள்ளனர். இதில் ஸ்ரீவந்தனா, லாவண்யா ஆகியோர் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் மாநில அளவில் 2 மற்றும் 3-வது இடங்களைப் பெற்றுள்ளனர். முகப்பேர் மேற்கு வேலம்மாள் பள்ளி மாணவர் ரோஷன் வரலாறு - புவியியல் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மெட்ரிகுலேஷன் பாட திட்டத்தில் தேர்வெழுதிய 1,32,545 பேரில் 1,22,246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.7 சதவீதமாகும். மெட்ரிகுலேஷனில் இந்த முறை 2,638 பேர் கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 1,374 பேர் மட்டுமே 100 மதிப்பெண் பெற்றிருந்தனர். ÷அதேபோல, அறிவியல் பாடத்தில் 1,894 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டில் 774 ஆக இருந்தது.
ஆங்கிலோ-இந்தியன்:
ஆங்கிலோ - இந்தியன் பாட திட்டத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த கோவை செயின்ட் பிரான்சிஸ் பள்ளி மாணவி ரெனி ஏஞ்சல், கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மாணவி நம்ரிதா ஆகியோர் 483 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளனர். 482 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தில் 3 பேரும், 481 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தில் 4 பேரும் உள்ளனர். ஆங்கிலோ இந்தியன் பாட திட்டத்தின்படி 4,762 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,503 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.3 சதவீதமாகும்.
ஓரியண்டல்:
ஓரியண்டல் பாட திட்டத்தில் அரபு பாடத்தை முதன்மையாக எடுத்துப் படித்த கரூர் யு.எச். ஓரியண்டல் அரபு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வி.எம்.ஏ. பக்மிதா பானு, எம்.ஏ.ஜைனப் ஷாகனாஜ் ஆகியோர் 476 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடித்துள்ளனர். அதே பள்ளியைச் சேர்ந்த ஏ.ஏ.நசிகா 473 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளார். 472 மதிப்பெண்களுடன் 2 பேர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.÷ஓரியண்டல் பாட திட்டத்தின்படி தேர்வு எழுதிய 1,548 பேரில் 1,298 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.2 சதவீதமாகும்.
ஜூன் 15-ல் மதிப்பெண் சான்றிதழ்:
பள்ளி மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஜூன் 15-ம் தேதி வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மாணவி ஜாஸ்மின் மதிப்பெண்கள்:
தமிழ் 98
ஆங்கிலம் 99
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 98
மொத்தம் 495
மெட்ரிக் மாணவி பவித்ராவின் மதிப்பெண்கள்:
தமிழ் 98
ஆங்கிலம் 98
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 99
மொத்தம் 495
பொறியாளர் ஆவதே இலட்சியம்: ஜாஸ்மின்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். பொறியாளர் ஆவதே தனது லட்சியம் என அவர் தெரிவித்தார். புளியங்குடி ஏ.வி.எஸ். உயர்நிலைப் பள்ளி மாணவி ரம்யா 493 மதிப்பெண்களும், பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எம். ஜெயலின் 493 மதிப்பெண்களும் பெற்று மாநில அளவில் 3-வது இடங்களைப் பெற்றுள்ளனர். ஜாஸ்மின் தந்தை எஸ். ஷேக்தாவூது, இரு சக்கர வாகனத்தில் ஜவுளிகளை வைத்து ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து வருகிறார். தாய் நூர்ஜஹான், இல்லத்தரசி. திருநெல்வேலி நகரம் ராவுத்தர் காம்பவுண்டில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். தமது பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பில் சேர்ந்து கணினி அறிவியல் பாடம் எடுத்து படித்து எதிர்காலத்தில் பொறியாளராக வருவதே தனது லட்சியம் என்றார் ஜாஸ்மின். பள்ளித் தலைமை ஆசிரியர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள் படிப்பில் என் மீது காட்டிய ஆர்வம் இந்தளவுக்கு மதிப்பெண்கள் பெற காரணமாக இருந்தது என்றும், டியூஷன் எதுவும் படிக்கவில்லை என்றும் ஜாஸ்மின் தெரிவித்தார்.
3-வது இடம்:
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயலின் 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-96, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-99. மாநில அளவில் முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்த்து படித்ததாக மாணவி ஜெயலின் தெரிவித்தார். பிளஸ் 2 முடித்த பிறகு பொறியியலில் சிவில் பிரிவு படித்து விட்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். புத்தகங்களை விரும்பிப் படிப்பதாகவும் பள்ளி ஆசிரியர்கள், தாய், தந்தை ஆகியோர் படிப்புக்கு ஊக்கம் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். தந்தை ஜே. மனுவேல் இடையன்குடியில் உள்ள டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், தாய் ஜாக்குலின் தமிழாகுறிச்சி டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மேலப்பாளையம் டார்லிங் காலனி ராஜாநகரில் வசித்து வருகின்றனர். புளியங்குடி ஏ.வி.எஸ். உயர்நிலைப் பள்ளி மாணவி ரம்யா 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
தமிழ்-97, ஆங்கிலம்-96, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. படிப்புக்கு ஆசிரியர்கள் எடுத்த தீவிர முயற்சியினால் இந்த மதிப்பெண் பெற முடிந்தது என்றார் மாணவி ரம்யா. அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து, எதிர்காலத்தில் எம்.பி.பி.எஸ். படித்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார். தந்தை முருகன் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றுகிறார். தாய் வெள்ளையம்மாள். ஏழைக் குடும்பத்தில் படித்து வரும் தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற தனது விரும்பத்தையும் அவர் தெரிவித்தார். முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின், 3-ம் இடம் பெற்ற மாணவிகள் ரம்யா, ஜெயலின் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் பாராட்டி கேடயங்களைப் பரிசாக வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக