கடலூர்:
கடலூர் அருகே திருப்பாப்புலியூர் ரயில்நிலையம் பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசுவதோடு பயணிகளை வஞ்சிக்கும் நிலையில் உள்ளது. ரயில் நிலையத்துக்கு பயணிகள் வரும் சாலையில் ஆட்டோக்கள் வழிமறித்து நிற்பதாலும் மக்கள் அவதியடைகிறார்கள்.விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டம் முடிவடைந்து ரயில்கள் இயக்கம் தொடங்கிய போதிலும், இந்த மார்க்கத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் இன்னமும் இயக்கப்படவில்லை. இயக்கப்படும் ரயில்களும் ஏதோ வேண்டா வெறுப்புடன், மக்களுக்கு பயனற்ற நேரங்களில் இயக்கப்படுவதாகவே தெரிகிறது. நகரின் மையப் பகுதியில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் அமைந்து இருக்கும் நிலையிலும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கு நிற்காது என்று, மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் பராமரிப்பு இன்றி பயணிகளை வஞ்சிக்கும் நிலையில் உள்ளது. இன்னமும் ரயில்கள் கால அட்டவணைகூட எழுதப்படவில்லை. டிக்கெட் வாங்கிக் கொண்டு அடுத்த பிளாட்பாரம் செல்ல மக்கள் பயன்படுத்தும் இரும்பு மேம்பாலம் இன்னமும் கட்டி முடிக்கவில்லை. முன்பதிவு செய்யும் அலுவலகத்துக்கு எதிரில் இளநீர் வியாபாரிகள் வெட்டிப் போட்ட மடல்கள், ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. அண்மையில் பெய்த மழையில் இவைகள் நனைந்து, துர்நாற்றம் வீசிக் கொண்டு இருக்கிறது. இதை ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்வதாகவே இல்லை. கடலூரில் யாரேனும் தங்கள் வேன்களை, கார்களை நிறுத்த இடம் இல்லை என்றால் ரயில் நிலைய வளாகத்தில் கொண்டுபோய் தாராளமாக நிறுத்தி கொள்ளும் நிலை உள்ளது. இதனை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாதது பரிதாபமானது.ரயில் நிலைய வாயிலிலும் வளாகத்துக்குள்ளும் நிறுத்தப்படும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். ரயிóல் நிலைய வாயிலை அடைத்து நிறுத்தப்படும் ஆட்டோக்களால் பயணிகள் ரயில் நிலையத்துக்குள் செல்ல முடியாமல், பெரிதும் அவதிப்படுகிறார்கள். ரயில் பயணிகள் இந்த ஆட்டோக்களைக் கடந்து செல்வது எளிதாகவும் இல்லை, பாதுகாப்பாகவும் இல்லை. இரவு நேரங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு முன், போனால் போகட்டும் என்று, ரயில்வே நிர்வாகம், பொதுமக்களுக்கு ஒரு வழிப்பாதையாக பயன்படுத்த வளாகத்தை அனுமதித்தது. தொடர்ந்து அந்தப் பாதை, பொதுவழியாகப் பயன்படுத்தப் படுவதால் ரயில் நிலையத்துக்குள் வருவோர் பெரும் சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது. டிக்கெட் முன்பதிவுக்கும், ஏ.டி.எம். ல் பணம் எடுப்பதற்காகவும் வருவோர், பெரிதும் அவதிப் படுகிறார்கள். துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை திருப்பாபுலியூர் ரயில் நிலையத்துக்கு ரயில்வே பாதுகாப்பு போலீசார் கொடுப்பதில்லை என்று ரயில் பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக