பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த மேலிருப்பு ஊராட்சியில் எரிசக்தி மூலம் மின்சாரம் தயார் செய்யும் மிஷன் நான்கு ஆண்டுகளாக பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. பண்ருட்டி அடுத்த மேலிருப்பு ஊராட்சியில் 11 குடிநீர் மோட்டார்கள், 150 தெருவிளக்குகள் உள்ளது. ஊரகவளர்ச்சித்துறை சார்பில் கடந்த 2005-06ம் ஆண்டு ஆர்.எஸ்.வி.ஒய்., திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய் செலவில் எரி சக்தி மூலம் மின்சாரம் தயார் செய்ய கட்டடம் கட்டப்பட்டு ஐந்து தெரு விளக்குகள், 3 குடிநீர் மோட்டார்கள் இயக்குவதற்காக 40 கே.வி.திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்கும் மெஷின்கள் பொருத்தப்பட்டன. மின்சாரம் தயாரிக்க மிஷின்கள் வைக்கப்பட்ட பின் மின்சாரம் தயாரிக்கவும், தயார் செய்யும் கிராமத்தில் உள்ள தெருவிளக்கு, மின்மோட்டார்களுக்கு இணைப்பு வழங்க நிர்ணயக்கப்பட்ட தொகை ஒதுக்கப்படவில்லை. இதனால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஊராட்சி தலைவர் சூடாமணி ராதாகிருஷ்ணன் முயற்சியின் பேரில் பள்ளி அருகில் உள்ள மின் மோட்டாருக்கு 89 ஆயிரம் மதிப்பில் கேபிள் பதிக்கப்பட்டது.
வடக்குத் தெருவில் உள்ள குடிநீர் மோட்டாருக்கு கேபிள் பதிக்க 3.35 லட்சமும், தொட்டி கட்டுவதற்கு 1.55 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. கடந்த 4 மாதத்திற்கு முன் சோதனை அடிப்படையில் விறகு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை ஒன்றிய அதிகாரிகள் வெள்ளோட்டம் பார்த்தனர். அதன்பின் டெண்டர் விட்டு 3 மாத காலம் ஆகியும் இதுவரை கேபிள் பதிக்கப்படவில்லை. விறகுகளை எரித்து அதன் மூலம் உருவாகும் நெருப்பின் மூலம் மின்சாரம் தயார் செய்வதற்கு ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் 50 காசு செலவாகும். மின் வாரியம் நிர்ணயம் செய்துள்ள 3 ரூபாய் 40 பைசாவை விட குறைந்தது. விறகு மூலம் மின்சாரம் தயாரிக்க ஒரு எலக்ட்ரீஷியன் உட்பட ஐந்து பணியாளர்கள் தேவை. ஆனால் கேபிள், தொட்டி கட்டும் பணிகள் முடிந்த பின் மின்சாரம் தயாரிக்க ஊழியர்கள் இல்லாமல் செயல்படாத நிலை உள்ளது. தற்போது மின்தட்டுபாடு உள்ள நிலையில் விரைந்து இத் திட்டம் செயல்படுத்தவும், குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க மற்ற ஊராட்சியிலும் மின்சாரம் தயாரிக்க இதற்கான தனி ஊழியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக