கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களுக்கும் கூடுதலாக 2,000 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. 500 ஆட்டோக்களுக்கு மேல் அனுமதியின்றி காஸ் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. நாளுக்கு நாள் கூடும் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கடலூர், நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் வட்டார போக் குவரத்து அலுவலகங்களில் ஆட்டோ, அபி ஆட்டோ (டீசல் ஆட்டோ), ஷேர் ஆட்டோக்கள் உட்பட 4,178 ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மட்டும் 50 ஷேர் ஆட்டோக்கள், 300 அபய் ஆட்டோக்கள் உட்பட 1,900 ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பதிவு செய்யப்பட்டவைகளை விட கூடுதலாக 6,000 ஆட்டோக்கள் மாவட்டம் முழுவதும் இயக்கப்படுகிறது. கடலூர் நகரில் மட்டும் 3,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. கடலூரில் பதிவு செய்யப்பட்ட 40 ஆட்டோ ஸ்டாண்டுகள் மற்றும் பதிவு செய்யப்படாமல் 30க்கும் மேற்பட்ட ஸ்டாண்டுகள் உள்ளன. மேலும் தெரு முனைகள், சொந்தமாக இயங்கும் ஆட்டோக்கள் என தனித், தனியாக ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
கடலூரில் பொது மக்களின் தேவைக்கும் கூடுதலாகவே தற்போது ஆட்டோக்கள் இயங்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நிறைந்த கடலூர் லாரன்ஸ் ரோட்டில் இரண்டு பக்கமும் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. பொதுவாக ஆட்டோக்கள் எந்த நகரத்தில் பதிவு செய்யப்படுகிறதோ அங்கிருந்து 30 கி.மீ., வரை சவாரிக்கு பயன்படுத்தலாம். ஆனால் சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட பல இடங்களில் பதிவு பெற்ற ஆட்டோக்கள் அனுமதி இன்றி கடலூரில் ஓடுகிறது. அதனை போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
அதே போல் கடலூரில் 500க்கும் மேற்பட்ட காஸ் ஆட்டோக்கள் அனுமதியின்றி இயங்குகின்றன. அதில் பெரும்பாலான ஆட்டோக்களில் வீட்டிற்கு பயன்படுத்தும் காஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல், டீசல் விலை கூடுதலாக உள்ளதால் காஸ் ஆட்டோவில் செலவும் குறைவு, வருமானமும் அதிகம் கிடைக்கிறது. காஸ் பயன்படுத்தும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. அனுமதி பெறாமல் இயங்கும் காஸ் ஆட்டோக்களை கண்காணித்து அதன் மீது போக்குவரத்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக