கடலூர்:
கடலூரில் மாம்பழ வரத்து தொடங்கியது. எனினும் மாம்பழங்கள் உரிய சுவை இல்லாததால், மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.முக்கனிகளில் முதல் இடத்தில் இருக்கும் மாம்பழங்கள், கோடை காலத்தில் மக்களின் நாவிற்குச் சுவையூட்ட வந்து குவிந்துவிடும். மார்ச் 15-ம் தேதிக்கு மேல் மாம்பழங்கள் சந்தைக்கு வந்து விடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கடந்த 15 நாள்களாகத்தான் கடைகளில் மாம்பழங்களைப் பார்க்க முடிகிறது. அதுவும் மிகக்குறைந்த அளவிலேயே பழக்கடைகளில் மாம்பழங்களைக் காண முடிகிறது. தோப்புகளில் இருந்து நேரடியாக விற்பனைக்கு வரும் மாம்பழங்களை ஏப்ரல், மே மாதங்களில் சாலை யோரங்களிலும், நகரின் முக்கிய சந்திப்புகளிலும் வியாபாரிகள் குவித்து வைத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால், இந்த ஆண்டு அத்தகைய நிலை இல்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பங்கணப்பள்ளி மாம்பழம் கடலூரில் கிலோ ரூ. 40க்குக் கிடைக்கிறது. செந்தூரன், ஒட்டு, ஆகிய ரகங்களும் கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப் படுகிறது. அல்ஃபோன்ஸô கிலோ ரூ. 80க்கும், காதர் கிலோ ரூ. 60க்கும், பீதர் கிலோ ரூ. 50க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு மாம்பழங்கள் காய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மாம்பழங்கள் அதிகமாகக் கிடைக்கும் சேலம் மாவட்டத்தில் இருந்து இன்னமும் மாம்பழங்கள் விற்பனைக்கு வரவில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். திருச்சி, மதுரை, ஆந்திரா போன்ற இடங்களில் இருந்துதான் மாம்பழங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. தற்போது சந்தைக்கு வந்து இருக்கும் மாம்பழங்கள்கூட உரிய சுவை இல்லை என்று தெரிவிக்கிறார்கள். இதனால் விலை இயல்பாக இருந்த போதிலும், மாம்பழங்களை அதிகளவில் விரும்பி மக்கள் வாங்க வில்லை என்று பழ வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து கடலூர் பழவிற்பனையாளர் ஏ.ஜி.ராஜேந்திரன் கூறுகையில்,
இந்த ஆண்டு 2 மாதம் தாமதமாக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. எனினும் அதிக அளவில் வரவில்லை. சேலத்தில் இருந்து இன்னமும் மாம்பழங்கள் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு வரவில்லை. இந்த ஆண்டு சந்தைக்கு வந்துள்ள மாம்பழங்களில் சுவை திருப்திகரமாக இல்லை. இதனால் மக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்க வில்லை. திருச்சி, மதுரை, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து மாம்பழங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. கடலூர் மற்றும் சுற்று வட்டாரங்களிலும் போதிய மாம்பழங்கள் வரவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் மாம்பழ சீசன் முடிந்து விடும் நிலையில் உள்ளது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக