பண்ருட்டி நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் வரும் 7ம் தேதி போராட்டம் நடத்தப்படும்' என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களின் விருப்பத்திற்கு மாறாக, வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் மூலம் குறுக்கு வழியில் பண்ருட்டி சேர்மன் பதவியை தி.மு.க., பறித்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக, பண்ருட்டியில் பெரும்பாலான பகுதியில், சாலையிலேயே கழிவு நீர் தேங்கி, கொசுத் தொல்லை, தொற்று நோயால் மக்கள் அவதிப்படுகின்றனர். பண்ருட்டி சேர்மனின் திறமையின்மையையும், மக்கள் விரோத போக்கையும், லஞ்சம் தலைவிரித்தாடுவதையும், நகராட்சி கவுன்சிலர்கள் தட்டிக் கேட்டால், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
நகராட்சி சீர்கேட்டிற்கு காரணமான பண்ருட்டி தி.மு.க., சேர்மன், நகராட்சி நிர்வாகம், தி.மு.க., அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வரும், 7ம் தேதி காலை 10 மணிக்கு, பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்திற்கு எம்.ஜி.ஆர்., மன்றத் தலைவர் பி.எச்.பாண்டியன் தலைமை வகிப்பார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிப்பார். இதில் அ.தி.மு.க.,வின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும், கட்சியினரும், கவுன்சிலர்களும், பொதுமக்களும் பங்கேற்பர். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக