சிதம்பரம்:
சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரை கிராமங்களுக்கு செல்லும் அத்திப்பட்டு - ஆலம்பாடி சாலை சீர்கேட்டால் பஸ் நிறுத்தப்பட்டு கிராம மக்கள் நடை பயணமாக செல்லும் அவல நிலை உள்ளது. சிதம்பரம் அடுத்த கொள்ளிடக்கரை, அத்திப்பட்டு, ஆலம்பாடி, நளம் புத்தூர், மாங்குடி உள்ளிட்ட கிராமங்கள் ஆண்டு தோறும் வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கோவில், பள்ளிகளில் அகதிகளாக தங்குவதோடு, விவசாய பயிர்களும் கடுமையாக பாதிக்கப்படுவது வாடிக்கை. குமராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட நளன்புத்தூர், ஆலம்பாடி, ஒற்றர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சிதம்பரத்தில் இருந்து வல்லம்படுகை, அத்திப்பட்டு வழியாக அரசு டவுன் பஸ்கள் சென்றன.
இந்நிலையில் அத்திப்பட்டிலிருந்து இருந்து ஆலம்பாடி செல்லும் சுமார் 3 கி.மீ., சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக மாறியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலை சீர்கேட்டால் அந்த வழியாக பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நடந்தே அத்திப் பட்டு கிராமம் வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடுமையான சிரமத்திற்கிடையே மக்கள் கரடு, முரடான சாலையில் நடந்து வருகின்றனர். கிராம மக்களின் கோரிக்கை ஏற்று சாலையை சீரமைக்க கிராவல் கொட்டப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணி துவக்கப்படாத நிலையே உள்ளது.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக