மருதாடு:
மருதாடு ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்காததால் ஒரே அறையில் ஐந்து வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
மத்திய அரசு கட்டாய கல்வியை சட்டமாக்கியதன் மூலம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக அரசும் இலவச கல்வி, சைக்கிள், பஸ் பாஸ் என பல்வேறு உதவிகளை வழங்கி கல்வியை ஊக்குவிக்கிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான கட்டட வசதி செய்து தருகின்றனர். பள்ளிகளில் கட்டட பற்றாக்குறை என்பது குறைந்து வருகிறது. ஆனால் கடலூர் ஒன்றியம் மருதாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை கண்டு கொள்ள யாருமில்லை. இப்பள்ளியில் 50 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு தலைமையாசிரியரும், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு 800 சதுரடியில் ஒரே அறை மட்டுமே உள்ளது. மேலே ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் உள்ளே அனல் வீசுவதால் மாணவர்கள் படிக்க சிரமப்படுகின்றனர். ஆசிரியர்கள் இருவரும் இரண்டு வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் போது மற்ற மூன்று வகுப்பு மாணவர்களும் கூச்சல் போடுவதால் படிப்பு பாதிக்கப்படுகிறது.
இப்பள்ளிக்கு கட்டடம் கட்ட விதிமுறைப் படி போதுமான இடவசதி இல்லையென காரணம் கூறி அனைவருக்கும் கல்வி திட்டத்தில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்க மறுக்கின்றனர். இருக்கும் கட்டடத்தை இடித்து விட்டு அங்கு புதிய கட்டடம் கட்டலாம். ஆனால் அதிகாரிகள் மனது வைப்பதில்லை. தற்போதுள்ள கட்டடம் முழுவதும் விரிசலாக காணப்படுகிறது. இடிந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்குள் அதிகாரிகள் விழித்து கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டடம் கட்ட நிதி ஒதுக்க அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அவர்கள் நிதி ஒதுக்க முன்வரவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக