உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

நல்ல வருமானம் தரும் கிளேடிஓலஸ் மலர் சாகுபடி


கிளேடிஓலஸ் வண்ண மலர்கள்
சிதம்பரம்: 
 
             பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் வண்ண மலர்களே கிளேடிஓலஸ். வடமாநிலங்களில் பயிர் செய்யப்படும் இம் மலரை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை தமிழகத்தில் அறிமுகம் செய்து சாகுபடியில் வெற்றி கண்டுள்ளது. நல்ல வருமானம் தரக்கூடிய இம் மலர் சாகுபடியை தமிழக விவசாயிகள் சிறப்பாக செய்யலாம். 
 
சாகுபடி குறிப்புகள்:  
 
               இம் மலர் கரணைகள் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயம் மற்றும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது கிளேடிஓலஸ். இம் மலர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நல்ல வடிகால் வசதி கொண்ட நிலத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கும் களிமண் நிலங்களில் இம்மலர் நன்றாக வளராது. மழை மற்றும் பனிக் காலங்களில் 15 முதல் 20 செல்சியஸ் வரை வெப்பம் கொண்ட பகுதிகளில் இளம்பருவத்தில் நன்றாக வளரும் தன்மை கொண்டது.பின்னர் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகமானாலும் மலர் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படாது. இம்மலர் சாகுபடி செய்ய தேர்வு செய்யப்படும் நிலத்தில் கார அமிலத்தன்மை 6 முதல் 7 வரை இருத்தல் வேண்டும். இவ்வாறு தேர்வு செய்தபின் வெப்பப் பகுதிகளில் நன்றாக வளரும் தன்மை கொண்ட கிளேடிஓலஸ் மலர் வகைகளான அமெரிக்கன் பியூட்டி, சம்மர் சன்ஷைன், கேண்டிமென் உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் தங்கள் தோட்டங்கள் மற்றும் நிலங்களில் நடவு செய்யலாம்.கிளேடிஓலஸ் கரணைகளை வரிசையாக 10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். பின்னர் 2 அல்லது 3 வாரங்களுக்கு பூவாளிகளை கொண்டு தொடர்ச்சியாக நீர் பாய்ச்ச வேண்டும்.விதைத்து 2, 3 வாரங்களில் மெதுவாக கிளேடிஓலஸ் மலர் செடி முளைக்கத் தொடங்கும். இத்தகைய காலகட்டத்தில் விவசாயிகள் கண்டிப்பாக நீர்பாசனத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். 2 முதல் 4 இலைகள் விடும் தருணத்தில் 12 முதல் 17 நாள்கள் வரை தொடர்ந்து நீர்பாய்ச்ச வேண்டும். பின்னர் களைகளை கட்டுப்படுத்த களையெடுக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வது அவசியம்.இவ்வாறு சாகுபடி பணிகளை மேற்கொண்ட 45-60 நாள்களில் கிளேடிஓலஸ் பூங்கொத்துக்கள் பூக்கத் தொடங்கும். இத்தகைய தருணத்தில் விவசாயிகள் கிளேடிஓலஸ் அறுவடை காலத்தை அடைந்து விட்டதை தெரிந்து கொண்டு அறுவடை செய்து விற்பனை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.கிளேடிஓலஸ் பூக்களை அறுவடை செய்தபின் கரணைகளை மீண்டும் தோண்டி எடுத்து 2 சதவீதம் பெவிஸ்டின் பூஞ்சானக் கொல்லி மருந்தில் நனைத்து பதப்படுத்த வேண்டும்
 
.மருத்துவ குணங்கள்: 
 
             கிளேடிஓலஸ் கரணைகளை நன்றாக பொடி செய்து உணவுடன் கலந்து உண்டால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும். இச்செடியை கசக்கி சூடுபடுத்தி தலையில் தேய்த்தால் தலைவலி போகும். இப் பழக்கம் வடமாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் கிளேடிஓலஸ் மலர் கரணைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் ஜம்மு மற்றும் வடமாநிலங்களில் உண்டு. 
 
கிளேடிஓலஸ் ஆண்டு அறிவிப்பு:
 
               2010-11-ம் ஆண்டை கிளேடிஓலஸ் மலர் ஆண்டாக இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் இந்த மலரை சாகுபடி செய்து விவசாயிகள் தமிழகத்தில் மலர்புரட்சியை ஏற்படுத்தலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior