உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

கிராமங்களில் அதிர்ச்சிதரும் மின்வெட்டு

 

கடலூர்:

                 கிராமப்புறங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

                   தமிழகத்தில் அதிகப்படியான கோடை வெயிலின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் நகரம் கடலூர். காலை 7 மணி முதலே வெயில் தகிக்கத் தொடங்கி விடுகிறது. இரவு நேரங்களில்கூட வெப்பம் தணிவதில்லை. காலை 5 மணி முதல் 7 மணி வரை லேசாக வீசும் குளிர்ந்த காற்றுகூட கடந்த 20 நாள்களாக இல்லை. பகலிலும் இரவிலும் காற்றோட்டமே இல்லாமல் உயர்ந்துவரும் வெப்ப நிலை, மக்களை பெரிதும் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இத்தகைய தட்பவெப்ப நிலையில் ஈஸ்னோஃபீலியா, நுரையீரலைப் பாதிக்கும் நோய்கள், தோல்நோய் போன்றவை எளிதில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

                  இத்தகைய சூழ்நிலையில் மின்வெட்டு, மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கடலூர் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கரில் கரும்புப் பயிர், 2 முதல் 5 மாதப் பயிராக உள்ளது. சொர்ணவாரி பட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் நடுவதற்குத் தேவையான நெல் நாற்று தயாராகிக் கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஆழ்குழாய்க் கிணறுகளையும் மின்சாரத்தையுமே நம்பி இருக்கின்றன.  இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கிராமப் புறங்களிலும் நகரங்களிலும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் 3 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. விவசாயத்துக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இது மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு. எனினும், பலமுறை அறிவிக்கப்படாமல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

                காற்றாலைகளில் இருந்து மின்சாரம் கிடைக்கத் தொடங்கியதால், மின்வெட்டு 3-ல் இருந்து 2 மணி நேரமாகக் குறைக்கப்படுதாக முதல்வர் அறிவித்தது மகிழ்ச்சி அளித்தது. மே 29 முதல் புதிய மின்வெட்டு அட்டவணையை மின்வாரியம் அறிவித்தது. இதனால் கடலூர் மாவட்ட நகர்ப் புறங்களில் மின்வெட்டு, 2 மணி நேரமாக குறைக்கப்பட்டது. எனினும் அறிவிக்கப்படாமல் துண்டிக்கப்படும் மின்வெட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது.துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி என்ற பெயரில், மாதம் இருமுறை 9 மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில் மின்வெட்டு படுமோசமாக உள்ளது. வீடுகளுக்கும் விவசாயத்துக்கும் மின்விநியோகம் பலமணி நேரம், எவ்வித அறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படுகிறது. 

            கடந்த 3 நாள்களாக கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி இருண்டு கிடப்பதாகவும், மின்வெட்டு மோசம் அடைந்து இருப்பதாகவும், கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.  விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் 9 மணி நேரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தும் 7 மணி நேரம் கூட வழங்கப்படுவதில்லை என்று விவசாயிகள் அங்கலாய்க்கிறார்கள்

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் வெங்கடபதி கூறுகையில், 

              சித்தரசூர் துணைமின் நிலையத்தில் இருந்து கடந்த 3 நாள்களாக மின்விநியோகம் இல்லை. ஏன் இந்த திடீர் மின்வெட்டு என்று கேட்டால், பதில் அளிக்க அதிகாரிகள் தயாராக இல்லை. மின்வாரியத் தலைவரைக் கேளுங்கள் என்று முகத்தில் அடிப்பதைபோல் பதில் அளிக்கிறார்கள். கரும்புப் பயிரும், நெல் நாற்றுகளும் கருகிக் கொண்டு இருக்கிறன என்றார்.

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், 

                 நகர்ப் புறங்களுக்கு மின்வெட்டைக் குறைக்கிறோம் என்ற பெயரில், சுமையை கிராம மக்களின் தலையில் கூடுதலாக ஏற்றி விட்டனர். முட்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து காலை 7 முதல் 12 மணிவரை மின்விநியோகம் இல்லை. காய்கறிச் செடிகளும் மலர்ச் செடிகளும் கருகுகின்றன என்றார். 

வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம் கூறுகையில், 

                 மின்வெட்டு குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல், கிராமங்களில் மின்வெட்டு அறிவிப்பின்றி அதிகரித்து விட்டது. காலை 10 முதல் 12 மணி வரை, பகல் 2 முதல் 4 மணி வரை தினமும் மின்சாரம் இல்லை. மும்முனை மின்சாரம் 7 மணி நேரம் கூட இல்லை. இதனால் 10 ஆயிரம் ஏக்கரில் கரும்புப் பயிர் கருகுகிறது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior