திட்டக்குடி :
திட்டக்குடி வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிக்காக அதே பகுதியில் அனுமதியின்றி மணல் எடுப்பதை திட்டக்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் திட்டக்குடி - அகரம் சீகூர் இடையே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிக்காக வெள்ளாற்றில் மண் உறுதி தன்மையை கண்டறிய ராட்சத இரும்பு பிளேட் கள் மீது மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர். இந்த பணி மேற்கொள்ளப்படும் இடத்தின் அருகிலேயே ஜே.சி.பி.,யைக் கொண்டு சுமார் 20 சதுர மீட்டர் அளவில் 2 மீட்டர் ஆழத்திற்கு களிமண் தெரியும் வரையில் மணல் தோண்டப்பட்டு மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி பேரூராட்சி 5 வது வார்டு கவுன்சிலர் செந்தில், 18 வது வார்டு கவுன்சிலர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் மண் தரம் பார்க்கும் இடத்தின் அருகிலேயே மணல் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரியில் இருந்து மட்டுமே வெள்ளாற்றில் பாலம் கட்டுவதற்கு மணல் கொண்டு வரவேண்டும் என கூறி தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து மண் தரம் கண்டறிய மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வந்த பணி நிறுத்தப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக