விருத்தாசலம்:
விவசாயிகள் தங்களிடம் உள்ள எள்ளை உடனடியாக விற்பனை செய்யுமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எள் விற்பனை குறித்து கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போது இறவை எள் சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் வரத்து ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இருக்கும். தற்போது சந்தைக்கு வரும் எள்ளின் தரம் மானாவாரி எள்ளைவிட நன்றாக இருக்கும்.மொத்த வரத்தில் 75 சதவீதம் சிவப்பு எள்ளாகும். மீதியுள்ள வெள்ளை எள், ஏற்றுமதி மற்றும் அடுமனை தயாரிப்பு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் ஆலையாளர்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரை கர்நாடக மாநிலத்தில் இருந்தும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆந்திரம், ஒரிசா மாநிலங்களில் இருந்தும் கொள்முதல் செய்கின்றனர்.மற்ற மாநில எள்ளைக் காட்டிலும் தமிழ்நாட்டு எள் தரம் நன்றாக இருப்பதால், மற்ற மாநிலத்திலிருந்து வாங்கப்படும் எள்ளோடு கலந்து எண்ணெய் எடுக்கின்றனர்.
புதுமை திட்டம்:
எள் பயிரிடும் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தேசிய வேளாண்மைப் புதுமைத் திட்டத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் சிவகிரி சந்தையில் 15 வருட சந்தைத் தகவல்களை ஆராய்ந்தது. நல்லெண்ணெய்க்கான சீரான தேவை, மற்ற மாநிலங்களில் உள்ள எள் பயிர்களின் நிலைமை, அவற்றின் மூலம் பெறப்படும் தொடர் வரத்து மற்றும் ஆராய்ச்சி முடிவுகளின்படி வரும் மாதங்களில் சிவப்பு எள்ளின் விலை தமிழ்நாட்டில் கிலோ ரூ.41 முதல் ரூ.43 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விலை ஏற வாய்ப்புள்ளது. இருப்பினும் எள் சேமிப்பு முறையாக செய்யவிட்டால் எள்ளின் தரம் குறைந்து விடும்.எனவே விவசாயிகள் தங்களிடம் உள்ள எள்ளை மேற்கூறிய விலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் எந்தப் பிடித்தமும் இல்லாமல் விற்று பயனடையுமாறு கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக