உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

தங்கை முறை பெண்ணை கடத்தியவர் கொலை: சரணடைந்த மூவரிடம் போலீசார் விசாரணை

கடலூர்: 

                   தங்கை முறை பெண்ணை கடத்திய வழக்கில் பிடிபட்டு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து விடுவிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரின் மகன், திருச்சி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவ்வழக்கில் சரணடைந்த மூவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

                கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமன், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் சுகுமாறன் என்ற கோடீஸ்வரபாபு(26). இவர், கடலூரில் தனியார் கல்லூரியில் படிக்கும் தன் தங்கை முறையான அறிவுக்கரசியை (21) காதலித்து வந்தார். கடந்த 28ம் தேதி அறிவுக்கரசியை கடத்திச் சென்றார். கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து கேரளாவிற்கு சென்று கடந்த 30ம் தேதி இருவரையும் அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின் சுகுமாறனை, அவரது சகோதரர் சுரேஷ்குமாருடனும், அறிவுக்கரசியை அவரது பெற்றோருடனும் அனுப்பி வைத்தனர்.

                   இந்நிலையில், சுகுமாறனை காணவில்லை என, அவரது தந்தை ராமன், புதுச்சத்திரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் விசாரித்த நிலையில், பச்சையாங்குப்பம் பிரகாஷ், பிரசன்னபாபு, வில்லியநல்லூர் ரவி ஆகியோர் சரணடைந்தனர். சுகுமாறனை கடத்திச் சென்று கொலை செய்து, திருச்சி அருகே காவிரி ஆற்றங்கரையில் வீசியதாக கூறினர். புதுச்சத்திரம் போலீசார் வழக்கை, கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்தனர். கடலூர் புதுநகர் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து, சரணடைந்த மூவரையும் விசாரித்தனர். அதில் சுகுமாறனின் தந்தை ராமன், சகோதரர் சுரேஷ்குமாருக்கும் தெரிந்துதான் சுகுமாறனை கொலை செய்ததாக கூறியதன் பேரில், இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

                  சரணடைந்த மூவரையும் போலீசார்  அழைத்துச்சென்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த பனையக்குறிச்சி சர்க்கார்பாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சுகுமாறனின் உடலை மீட்டு நேற்று காலை 11 மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு வந்தனர். உடலை டாக்டர் கேசவன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தி மாலை 3 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள், புகார் செய்த ராமன் மற்றும் அவரது இளைய மகன் சுரேஷ்குமாரையும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க முயல்வதைக் கண்டித்தும், அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மாலை 5 மணிக்கு சிலம்பிமங்கலத்தில் சுகுமாறன் உடலை ரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால்  சிதம்பரம் - கடலூர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், போலீஸ் காவலில் வைத்துள்ள ராமன் மற்றும் சுரேஷ்குமாரை விடுவித்தால் தான், சுகுமாறன் உடலை அடக்கம் செய்வோம் எனக்கூறினர்.

                      இதைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் இருந்த ராமன் மற்றும் சுரேஷ்குமாரை அதிரடிப்படை போலீசார் அழைத்துச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகே மாலை 6 மணிக்கு சாலை மறியலை விலக்கிக் கொண்டு உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். கொலை சம்பவம் தொடர்பாக சரணடைந்த மூவரிடமும், டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு பிறகே வழக்கின் உண்மை நிலை தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior