உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

எதிர்கால கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது

நெய்வேலி:

                  பெற்றோர் தங்கள் முதுமைப் பருவத்தில், தங்களது குழந்தைகளின் தயவில் வாழவேண்டும் என்ற எண்ணத்தில், எதிர்கால கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேசிய அறிவியல் தினவிழாவில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பேசினார். இந்தியாவுக்கு முதல்முறையாக நோபல் பரிசு பெற்றுத்தந்துவரும், இயற்பியல் விஞ்ஞானியுமான சர்.சி.வி.ராமன், தனது கண்டுபிடிப்பான "ராமன் விளைவு' எனும் சூத்திரத்தை கண்டுபிடித்த தினமான பிப்ரவரி 28-ஐ நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

              இதையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு அறிவியல் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கிப் பேசியது: ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு வகையில் வெவ்வேறு அளவில் திறமைகள் உள்ளன. பெற்றோர் குழந்தைகளின் திறனை உணர்ந்து அதற்கேற்றார்போல் அவர்களது எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டுதல் வேண்டும் என்றார் அன்சாரி.÷முன்னதாக லிக்னைட் ஹாலில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை என்எல்சி கல்வித்துறைச் செயலர் சுகுமார் திறந்து வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நெய்வேலி மையத்தின் செயலர் தாமோதரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் சிவக்குமார் நன்றி கூறினார். டாக்டர் பிரேம்குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் நாராயணன், நெய்வேலி மையத் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் ராஜகோபால், ரவீந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior