பண்ருட்டி :
பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் நகராட்சியினர் நடத்திய கண் துடைப்பு நாடகத்தினால், மீண்டும் மார்க்கெட் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி நகரில் காந்தி ரோடு, கடலூர் சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, காய்கறி மார்க்கெட், இந்திராகாந்தி சாலை ஆகிய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என போலீசார் கொடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த 25, 26ம் தேதிகளில் நகராட்சி கமிஷ்னர் உமாமகேஸ்வரி தலைமையில் சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மார்க்கெட் பகுதியில் இடிக்கப்பட்ட பொருட்களை அகற்றாமல் அங்கேயே குவித்து வைத்துள்ளனர். அதன் மீது அப்பகுதி வியாபாரிகள் குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.
அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்காததால், ஆக்கிரமிப்பு அகற்றபட்ட மார்க்கெட் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. அதிகாரிகளுக்கு கணக்கு காண்பிப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இதனை உணர்ந்து நகராட்சி நிர்வாகம் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மீண்டும் சாலைகள் ஆக்கிரமிக்கப் படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக