உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

இறந்த மாணவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


சிதம்பரம் : 

                     போலீஸ் விரட்டியதில் வாய்க்காலில் விழுந்து இறந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப் பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் இன்ஜினியரிங் படித்த கவுதம்குமார் (20) 28ம் தேதி விபத்தில் இறந்தார். ஆத்திரமடைந்த சக மாணவர்கள் செய்த ரகளையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். தப்பியோடிய மாணவர்கள் பாலமான் வாய்க்காலில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் இறந்தனர்.

                   ஜார்கண்ட் மாநில மாணவர் சுமித்குமார் உடல் நேற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை கண்டு அவரது அண்ணன் சதிஷ்குமார் கதறி அழுதார். உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதாக கூறியதை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தாசில்தார் காமராஜ் முன்னிலையில் சதீஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக மாணவர் உடலுக்கு பல்கலைக் கழகம் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சுமித்குமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப் பட்டது. டி.ஐ.ஜி., மாசானமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
                        நேற்று காலை மீட்கப்பட்ட முகமது சர்பரேஸ் ராப் (22), ஆஷிஷ் ரஞ்சன் குமார் (20) ஆகியோரது உடல்கள் காலை 11 மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மாலை 5.30 மணிக்கு டாக்டர்கள் ஆனந்தகுமார், சாராசெலின்பால் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். மாணவர் ஆஷிஷ் ரஞ்சன் குமாரின் உடலை பார்த்த அவரது தந்தை தன் மகன் உடல் இல்லை என மறுத்தார். சக மாணவர் ஆதித்யகுமார், ஆஷிஷ் ரஞ்சன்குமாரின் கையில் கட்டியிருந்த ராக்கி, பேண்ட் சட்டையை அடையாளம் காட்டிய பிறகு சுவிந்தர்குமார் ஒப்புக் கொண்டார்.

                       மாலை 6.40 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்த பின் இரவு7.50 மணிக்கு ஆஷிஷ் ரஞ்சன் குமாரின் உடலை அவரது தந்தையிடமும், முகமது சர்பரேஸ் ராப் உடலை அவரது உறவினரும், அண்ணாமலை பல்கலை கழக முதலாமாண்டு மாணவருமான முகமது ஒசாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இரு மாணவர்களின் உடல்களை தனித்தனி ஆம்புலன்சில் ஏற்றி இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை நடந்த கடலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கு பகுதியில் எஸ்.பி., பகலவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலூர் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இரு மாணவர்களின் உடலுக்கும் அமைச்சர் பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior