கடலூர்:
கள் இறக்க தமிழக அரசு அனுமதி மறுப்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 37-வது பிரிவுக்கும் எதிரானது என்று, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
கடலூரில் புதன்கிழமை தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியது:
இந்தியா முழுவதும் 8 கோடி பனை மரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 5 கோடி பனை மரங்களும், 6 கோடி தென்னை மரங்களும் உள்ளன. தென்னை பனை மரங்களை நம்பி 10 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும், 50 லட்சம் விவசாயக் குடும்பங்களும் உள்ளன. கள் இறக்கவும் குடிப்பதற்கும் தமிழக அரசு தடைவிதித்து இருப்பது முறையற்றது. கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறியுள்ளது. எனவே கள் இறக்க அனுமதி மறுப்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரை, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.
கடந்த 22 ஆண்டுகளாக தமிழக அரசு கள் இறக்கத் தடைவிதித்து இருப்பதால். பனை, தென்னைத் தொழிலில் ஈடுப்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. உலக நாடுகளின் மது வகைகள் அனைத்தும் தமிழகத்தில் விற்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழ் மண்ணின் பானமான, கள் இறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது சட்டவிரோதம் ஆகும். இலங்கை உள்ளிட்ட நாடுகள் வெளிநாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட கள்ளை, பாக்கெட்டிலும் டப்பாக்களிலும் அடைத்து ஏற்றுமதி செய்கின்றன. தமிழகத்தில் பெப்ஸி, கோக் போன்ற அயல்நாட்டு பானங்களின் விற்பனை பாதிக்கப்படும் என்ற காரணத்துக்காக, கள்ள இறக்கவும் குடிக்கவும் தமிழக அரசு தடைவிதிப்பது நியாயம் அல்ல. டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையால், எந்த முதல் அமைச்சராக இருந்தாலும் அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.3 கோடி தனியாகக் கிடைக்கிறது. டாஸ்மாக் மது விற்பனை பாதிக்கப்படும் என்பதற்காக கள் இறக்க அனுமதி மறுப்பது சரியல்ல. கள் இறக்க அனுமதி மறுப்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான முடிவாக நாங்கள் கருதவில்லை. ஒட்டுமொத்தத் தமிழ் சமுதாயத்துக்கு எதிரானது. இது தொடர்பாக சிவசுப்பிரமணியன் குழு அறிக்கை அளித்து 2 மாதங்களாக ஆகிறது. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. டாஸ்மாக் மதுபானங்களை விட கள்ளால் ஏற்படும் தீமை அதிகம் என்று நிரூபிக்கப் பட்டால், நாங்கள் இந்த கோரிக்கையைக் கைவிட்டு விடுகிறோம். டாஸ்மாக் மது பன்றியைப் போன்றது, கள் பசுவைப் போன்றது. கள் இறக்கவும் குடிக்கவும் விதிக்கப்பட்டு இருக்கும் தடையை நீக்கக் கோரி, நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு வரும்போது, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி சென்னை சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம் என்றார் நல்லசாமி.