கடலூர் :
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்புக்காக பள்ளியிலேயே பதிவு செய்த மாணவ, மாணவிகள் பலர் இதுவரை அட்டை கிடைக்காமல் சீனியாரிட்டியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி இறுதி தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து சீனியாரிட்டி பெறுவது வழக்கம். அதனால் 10ம் வகுப்பு மார்க் ஷீட் பெற்றவுடன் மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒரே நேரத்தில் குவிந்து விடுவதால் நெரிசலில் சிக்கி பல மாணவ மாணவியர்கள் மயக்கமடைகின்றனர். இதை தவிர்ப்பதற்காக பள்ளி இறுதி தேர்வு சான்றிதழ்களை வேலை வாய்ப்பு அலுவலகத் திற்கு கொண்டு செல்லாமல், அந் தந்த பள்ளி தலைமையாசிரியர் மூலமாக விண்ணப்பம் பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்தது.
அதன்படி கடந்தாண்டு தேர்வு முடிவு வெளியானவுடன் 15.6.2010ம் தேதி மாணவ மாணவியர்களுக்கு பள்ளியிலேயே விண் ணப்பம் கொடுத்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. பூர்த்தி செய்த விண்ணப்பங் களை 20.6.2010க்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் முறையாக பதிவு செய்து வேலை வாய்ப்பு பதிவு அட்டை பெற்று மாணவ மாணவிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை அலட்சியப்படுத்தியதோடு, மாணவர்களிடம் பெறப்பட்ட பூர்த்தி செய்த விண் ணப்ப படிவங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வழங் காமல் காலம் தாழ்த்தி வந்தன. ஒரு வழியாக தனியார் பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்களை போராடி வேலை வாய்ப்பு அலுவலக ஊழியர்கள் பெற்று, அதனை பதிவு செய்து வேலை வாய்ப்பு பதிவு அட்டையை தயார் செய்து வைத்திருந்தனர். அதனை தனியார் பள்ளி நிர்வாகங்கள் வாங்கிச் சென்று மாணவ, மாணவிகளுக்கு வழங்காமல் காலம் கடத்தின.
இவை அனைத்தையும் விட கொடுமையாக, கடலூரில் உள்ள பிரபல தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று, வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று வந்த மாணவர்களின் வேலை வாய்ப்பு பதிவு அட்டையை இதுவரை சம்மந் தப்பட்ட மாணவர்களிடம் ஒப்படைக்காமல் ஏதேதோ காரணம் சொல்லி காலம் கடத்தி வருகிறது. இது போன்ற பிரச்னையால் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகள் மூலம் பதிவு செய்த 10ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு பதிவு அட்டை கிடைக்காமல் ஓராண்டு சீனியாரிட்டியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்டை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற பிரச்சனைகள் வரும் கல்வியாண்டில் ஏற்படாமல் இருக்க தற்போதே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப் பாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வருவதற்கு முன்பாக தனியார் பள்ளி நிர்வாகங்களை அழைத்து உரிய ஆலோசனைகள் வழங்குவதோடு, வேலை வாய்ப்பு பதிவு பதிவு பணியை கண்காணித்திட வேண்டும்.