சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமையில் 3-ம் கட்ட பொது விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் வட மாநில மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல மாணவர் கெüதம்குமார் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி விபத்தில் இறந்ததை அடுத்த பல்கலையில் பயிலும் வடமாநில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு பல்கலைக்கழக கட்டடங்கள், வேன் மற்றும் ஆட்டோக்களை சேதப்படுத்தினர். இச்சம்பவத்தின் போது போலீஸôர் மாணவர்களை விரட்டியடித்த போது 3 பொறியியல் புல மாணவர்கள் முத்தையாநகர் அருகே உள்ள பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் மார்ச் 5-ம் தேதி முதல் சம்பவ இடங்களைப் பார்வையிட்டு விசாரணையைத் தொடங்கி நடத்தி வந்தார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் கடந்த மார்ச் 18-ம் தேதி, 24-ம் தேதி ஆகிய இருகட்ட பொது விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் 3-ம் கட்ட பொது விசாரணை சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (மார்ச் 31) நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் அண்ணாமலைப் பல்கலையில் பி.இ. பயிலும் 3-ம் ஆண்டு வட மாநில மாணவர்கள் 6 பேரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.