கடலூர்:
கடலூர் அருகே பாலம் கட்டுவதற்கு வசதியாக அமைக்கப்பட்ட தடுப்பணைகளால், உப்பனாற்றில் நீர் மட்டம் உயர்ந்து, 200 ஏக்கர் விளை நிலங்களுக்குள் உவர் நீர் புகுந்தது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே சுபஉப்பளவாடிக்கும் கண்டக்காடு கிராமத்துக்கும் இடையே உப்பனாறு குறுக்கிடுகிறது. ஏற்கெனவே இந்த இடத்தில் தரைப்பாலம் இருந்தது. சுனாமிப் பேரலையின்போது, தரைப்பாலத்தின் வழியாகச் சென்று உயிர் பிழைக்கலாம் என்று நினைத்து வந்தவர்கள் தரைப் பாலத்துக்கு மேல் உப்பனாற்றின் நீர்மட்டம் உயர்ந்து இருந்ததால் அதில் மூழ்கி பலர் இறந்தனர். எனவே சுனாமி நிவாரண நிதியிலிருந்து சுபஉப்பளவாடி - கண்டக்காடு இடையே மேம்பாலம் கடந்த 6 மாதமாகக் கட்டப்பட்டு வருகிறது. பாலம் கட்டும் பணி முடிவடைய மேலும் 6 மாத காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலம் கட்டும் இடத்தில் உப்பனாறு மூலம் கடல்நீர் புகுந்து, பாதிப்பு ஏற்படாமல் இருக்க பாலத்தின் இரு பக்கமும் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பணைகளில் நீர்மட்டம் உயர்ந்து, அது உவர் நீராகக் காணப்படுகிறது. நீர் மட்டம் உயரஉயர, உவர்நீர் விளைநிலங்களுக்குள் புகத்தொடங்கி விட்டது. இதனால் கத்தரிச் செடிகள், கோழிக் கொண்டை பூச்செடிகள் மற்றும் நெல் பயிரிடப்படும் விளைநிலங்களுக்குள் உவர் நீர் புகுந்து, விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 ஏக்கர் விளைநிலங்கள் இதுவரை பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். நெல்வயல்கள் பல விவசாயம் செய்ய முடியாமல் கரம்பாக மாறிவிட்டன. இரு தடுப்பணைகளையும் ஒரு குழாய் மூலம் இணைத்து விட்டால் நீர்மட்டம் குறைந்து, பாதிப்பு குறைய வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். எனினும் உவர் நீர் புகுந்த நிலத்தை மீண்டும் விளைநிலமாக மாற்ற பெரிதும் சிரமப்பட வேண்டியது இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக