
கடலூர்:
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கடலூரில் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் பெருமளவுக்கு உயர்ந்து இருக்கிறது. சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் நகரங்களில் கூட இந்த அளவுக்கு ஆட்டோக் கட்டணம் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய நகரமான கடலூரில், சுமார் 3 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. மக்களின் தேவைக்கு அதிகமாக உள்ள ஆட்டோக்களால், பல வழிகளில் மக்களுக்கு தொல்லை ஏற்படுகிறது. கடலூரில் டவுன் பஸ்களும், மினி பஸ்களும் சில குறிப்பிட்ட மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே இயக்கப்படுகின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய வழித்தடங்கள் உருவாக்கப்படவில்லை. நகரம் விரிவடைந்து இருப்பதற்கு ஏற்றபடி, நகரப் பேருந்துகளை புதிய வழித்தடங்களில் இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.
இதன் விளைவாக போக்குவரத்துக்கு, ஆட்டோக்களை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். நகரப் பேருந்துகளில் ரூ. 5 செலவிட்டு பயணிக்க வேண்டிய இடங்களுக்கு ரூ. 30-க்கு மேல் ஆட்டோக்களுக்கு செலவிட வேண்டிய கட்டாயம் மக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தால் திணிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி கடலூரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயந்து வருவதுபோல், அவற்றால் பிரச்னைகளும் உயர்ந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையைத் தவிர வேறு அகலமான சாலைகள் கடலூரில் இல்லை. இதுபற்றி யாருக்கும் கவலை இல்லை. விளைவு குறுகலான சாலைகளில் ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்தி போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு செய்கிறார்கள்.100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட். அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய போலீஸôரோ, ஆட்டோ ஓட்டுநர்களிடம் இருந்து பெறப்படும் "சிலவற்றுக்காக’ மயங்கி, மக்களை மறந்து விடுகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் செய்யும் தவறுகளுக்கு முழு அங்கீகாரம் அளிக்கும் நகரங்களில் கடலூர் முதலிடம் வகிக்கிறது. ஆட்டோக்களால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. இத்தனை ஆட்டோக்கள் இருந்தால் ஓட்டுநர்கள் சம்பாதிப்பது எப்படி? கிடைத்தது அப்பாவிப் பொதுமக்கள் தான். 1 கி.மீ. தூரத்துக்கு கட்டணம் ரூ. 30 -க்கு மேல் வசூலிக்கிறார்கள். கடலூர் புதுநகரில் இருந்து துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் 4 கி.மீ. தூரம் தான். இதற்கு ஆட்டோ கட்டணம் ரூ. 100. துறைமுகம் சந்திப்பில் இருந்து திருச்சிக்கு ரயில் கட்டணம் ரூ. 30 தான். இதனால் நகரின் பிரதானப் பகுதிகளான திருப்பாப்புலியூர், மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ரயில் பயணத்தையே மறந்து விட்டனர்.
ஏன் அபரிமிதமாகக் கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்றால், விலைவாசி உயர்ந்து விட்டது என்கிறார்கள். சென்னை, பெங்களூர், திருவனந்தபுரத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் விலைவாசி உயர்வதைவிட, கடலூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும்தான் அதிகமாக உயர்கிறது போலும்.கேஸ் முறைகேடு எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த கடலூர் ஆட்டோக்களும், ஆம்னி வேன்களும் பயன்படுத்துவது சமையல் கேஸ்தான். கேஸ் விநியோகஸ்தர்கள் தாராளமாக இந்த வாகனங்களுக்கு முறைகேடாக சிலிண்டர் வழங்குகிறார்கள். காரணம் கூடுதல் விலை கிடைக்கிறதே. இதன் விளைவு குறித்த காலத்தில் வீடுகளுக்கு சமையல் கேஸ் கிடைப்பது இல்லை. கேஸ் சிலிண்டர் வாங்கிய தினத்தில் இருந்து 20 நாள்கள் கழித்துத்தான் பதிவு செய்ய முடியும். தொலைபேசி மூலம் பதிவு செய்வதற்கே 5 நாள்கள் ஆகிவிடும். காரணம் கேஸ் நிறுவனங்களின் தொலைபேசிகள் பலநேரங்களில் இயங்குவது இல்லை. பதிவு செய்த 15 தினங்கள் கழித்துதான் சிலிண்டர் கிடைக்கும். இதற்கு முழுமுதற் காரணம், சமையல் கேஸின் பெரும்பகுதி ஆட்டோக்களுக்கு எரிபொருளாகப் போய்விடுவதுதான். இதைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டிய அதிகாரிகளோ எப்போதும்போல் மெüனம் காக்கின்றனர். இத்துடன், ஆட்டோக்களில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு இருக்கும் மீட்டர்களை இயங்கச் செய்து, முறைப்படி கட்டணம் வசூலிக்க வட்டாரப் போக்குவரத்துத் துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்தால்தான் மட்டுமே மக்கள் காப்பாற்ற முடியும். செய்வார்களா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக