சிதம்பரம் :
நடராஜர் கோவில் ஞானபிரகாச தெப்ப குளம் கழிவுநீர் கலந்தும், ஆகாயத் தாமரை படர்ந்துள்ளதால் தெப்பல் உற்சவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சிதம்பரம் நகர மைய பகுதியில் கனகசபை நகரில் அமைந்துள்ள ஞானபிரகாச குளம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு இரு முறை நடக்கும் ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன விழாக்களின் போது 12வது நாள் இந்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கும். குளத்தை சுற்றிலும் மதில் சுவர், படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குளம் பராமரிப்பின்றி முற்றிலும் பாழாகிப் போனது. தூர்ந்து போய், சுற்றியுள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் கலக்கிறது. அத்துடன் குளம் தெரியாத அளவில் ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டி துர்நாற்றம் வீசுகிறது. குளத்தை தூர்வாரி படகு குழாம் அமைக்க சுற்றுலா வளர்ச்சி நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகராட்சியின் ஆர்வமின்மையால் அந்த பணம் திரும்பி விட்டது. குளத்தின் தற்போதைய நிலையால் நடராஜர் கோவில் தெப்ப உற்சவம் நடந்து 10 ஆண்டு ஆகிறது. சம்பிராயத்திற்காக சாமியை எடுத்துச் சென்று தண்ணீர் தெளித்து திரும்புகின்றனர். குளத்தை தூர்வாரி தீர்த்த குளமாக மாற்றி தெப்ப உற்சவம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக