உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

என்.எல்.சி. ஊதியமாற்று பேச்சுவார்த்தையில் பின்னடைவு

நெய்வேலி:

              என்.எல்.சி. தொழிலாளர்களின் புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சின் போது ஊதிய நிர்ணய அலகீட்டுத் தொகை நிர்ணயம் தொடர்பான ஃபார்முலாவில் குழுப்பம் நிலவி வருவதால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தொமுச செயலர் ஆர்.கோபாலன்  தெரிவித்தார்.  

               என்எல்சி தொழிலாளர்களுக்கு 01-01-2007 முதல் வழங்கவேண்டிய புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையிலான ஊதியம் இதுவரை வழங்கப்படாததால், என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் பலச்சுற்று பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளில் சில அம்சங்களை நிர்வாகம் ஏற்றுகொண்ட போதிலும், இன்கிரிமென்ட் மற்றும் அலவன்ஸ் விஷயத்தில் நிர்வாகத்துக்கும் தொழிற்சங்கத்துக்கும்  முரண்பாடு இருந்துவருகிறது.

               இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பலமணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகம் சில நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஈட்டிய விடுப்பு, வருகைப் பதிவின்போது வழங்கப்படும் கிரேஸ் டைம், மாதத்தில் இருநாள் வழங்கப்படும் தாமத வருகை சலுகை  உள்ளிட்ட சலுகைகள் திரும்பப் பெறப்படும் எனவும், அனைத்து தொழிலாளர்களும் கண்டிப்பாக சீருடை அணியவேண்டும், தொழிலகப் பகுதிகளுக்கும் ஏஎம்எஸ் முறை அமல்படுத்தப்படும் என்ற நிபந்தனைகள் விதித்ததாகக் கூறப்படுகிறது. இவற்றை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அடிப்படை ஊதியம் நிர்ணயம் தொடர்பாக பேசப்பட்டது. இதில் அடிப்படை ஊதியத்துக்கான ஊதிய அலகீட்டுத் தொகை வகுப்பதற்கான சூத்திரத்தை பின்பற்றுவதில் நிர்வாகம் புதிய அணுகுமுறையை புகுத்தவது ஏற்கக் கூடியதாக இல்லையென்றும், இதனால் தொழிலாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடும். எனவே பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தொமுச செயலர் ஆர்.கோபாலன் தெரிவித்தார். 

               மேலும் புதன்கிழமை சென்னை சென்று தொமுச பேரவை நிர்வாகிகளை சந்தித்து, பேச்சு விபரங்களை தெரிவித்து, அதன்பின் பேரவை வழிகாட்டுதல்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றார். அலவன்ஸ் குறித்து கேட்டபோது, தற்போது ஊதிய நிர்ணய அலகீட்டுத் தொகை மட்டுமே பேசிவருகிறோம். இதில் சரியான முடிவு எட்டிய பிறகு அலவன்ஸ் குறித்து பேசுவோம் என்றார் கோபாலன். செவ்வாய்க்கிழமை நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் தொமுச தலைவர் வீ.ராமச்சந்திரன், செயலர் ஆர்.கோபாலன், அலுவலகச் செயலர் எ.காத்தவராயன், பாமக தொழிற்சங்க தலைவர் பெருமாள், செயலர் திலகர், பொருளாளர் ஏஞ்சலின் மோனிக்கா, அலுவலகச் செயலர் சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior