மக்கள் கணினி மையம் மூலம் வில்லங்கச் சான்றுகள், திருமணச் சான்றுகள் ஆகியன வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
பதிவுத் துறையின் சேவைகளைப் பொது மக்களுக்கு எளிய முறையில் வழங்கும் பொருட்டு, இந்தத் துறையால் வழங்கப்படும் வில்லங்கச் சான்றுகள், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் திருமணச் சான்றுகள் ஆகியன மக்கள் கணினி மையம் மூலம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மாநிலம் முழுவதும் நடைபெறும் கிறிஸ்தவர்களுக்கு இடையிலான திருமணங்களுக்கு சென்னையில் உள்ள பதிவுத் துறைத் தலைவர் அலுவலகத்தில் மட்டுமே சான்று வழங்கப்படுகிறது. இது, பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.எனவே, 1872-ம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படும். கிறிஸ்தவர்களுக்கு இடையிலான திருமணங்களுக்கான பதிவுகள் சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். அந்த அலுவலகத்திலேயே சான்றுகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.கால தாமதமாக செலுத்தப்படும் முத்திரைத் தீர்வைக்கு மாதத்துக்கு 2 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் இதைக் குறைக்க கோரிக்கைகள் வரப்பெற்றன. இதையடுத்து, வட்டி விகிதம் மாதத்துக்கு 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சுரேஷ் ராஜன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக