அட்சய திருதியை முன்னிட்டு, இந்தாண்டும் பொதுமக்களிடம் நகை வாங்குவது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அட்சய திருதியை தினத்தன்று, தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்றைய தினத்தில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையில் தங்கம் வாங்குகின்றனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், இப்போதே முதலீடு செய்து விடுவோம் என்று பலரும் நினைக்கின்றனர்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1,100 ரூபாயாக இருந்தது. ஒரு கிராம் தங்க நாணயம் வாங்க முடியாதவர்கள் கூட, மில்லிகிராம் கணக்கில் 200 ரூபாய்க்கு மூக்குத்தி, சிறு காதணிகளை ஆர்வமாக வாங்கினர். கடந்தாண்டு ஒரு கிராம் தங்கம் 1,399க்கு விற்பனையானது. நேற்றைய விலையில் ஒரு கிராம் 1,670 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வரும் ஞாயிறன்று (அட்சய திருதியை) 1,700 ரூபாயைத் தாண்டிவிடும் என கடைக் காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.தங்க நாணயங்கள்: சிறு மூக்குத்தியின் விலையே 700 ரூபாய்க்கு விற்கப்படுவதால், ஏழை, நடுத்தர மக்கள் அன்றைய தினம் தங்கம் வாங்க மலைக்கின்றனர். வாங்குவோரின் ஆர்வத் தைத் தூண்டும் வகையில், சில கடைகளில் 100, 200 மில்லி கிராமில் தங்க நாணயம் செய்யப்பட்டன என்றாலும், அவற்றின் அடக்க விலை அதிகம் என்பதால் இதை கைவிட்டனர்.
தற்போது குறைந்தபட்சமாக அரை கிராம் தங்க நாணயங்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன. அரை கிராம், ஒரு கிராம், இரண்டு, நான்கு, எட்டு கிராம் அளவுகளில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.ஒரே நாளில் தங்கம் வாங்குவோர் அதிகம் என்பதால், பெரிய கடைகளில் முன்தொகையாக பணத்தை பெற்றுக் கொண்டு, அன்றைய தினத்தில் தங்கத்தை விற்பனை செய்கின்றனர். இதனால், கூட்டத்தில் தங்க நாணயத்தை தேடி எடுத்து, எடை போட்டு பணம் செலுத்துவதை தவிர்க்க முடிகிறது.
நகைக்கடை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில்,
'ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்யும் வரை, தங்கம் விலை குறையாது. எனவே, இப்போதே முதலீடு செய்வது நல்லது. அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது குறித்து மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். வசதி படைத்தவர்கள் தங்க நாணயத்தை உருக்கி நகை செய்யலாம். ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் நாணயமாக வாங்கினால், வங்கியில் நகைக்கடனுக்கு வைக்க முடியாது. எனவே, ஆபரணமாக வாங்குவதே சிறந்தது' என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக