கடலூர்:
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14,160மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.1.13 கோடியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்க, மீனவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் காலம் மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால், கடலில் மீன் வளம் குறையாமல் இருக்க, தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக இந்தத் தடை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் கடலோர மீனவர் குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில், தமிழக அரசின் மீன் வளத்துறை நிவாரணத் தொகை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தலா ரூ.500 வீதம் 13,625 குடும்பங்களுக்கு ரூ.68,12,500 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நிவாரணத் தொகை ரூ.800 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி 14,160 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.1,13,28,000 வழங்கப்படுகிறது.
திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிவாரணத் தொகை மீனவர்களுக்கு வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்தார். நிவாரணத் தொகை வழங்கும் பணி மீன்வளத் துறை மூலம் தொடர்ந்து நடைபெறும். இந்த நிகழ்ச்சியில், விபத்தில் இறந்த இரு மீனவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலமாக தலா ரூ.1,02,500 வீதம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக