பி.இ., எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கல்விக் கட்டண ரத்து சலுகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அரசின் சலுகையைப் பெறுவதற்கு, வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்படும் "முதல் தலைமுறை மாணவர்' என்ற சான்றிதழில் மாணவருடைய பெற்றோர் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களை மட்டும் குறிப்பிட்டு இருந்தால் போதாது; மாணவருடைய தந்தை, தாய், அவர்களின் பெற்றோர் பற்றிய விவரங்களும் (அப்பா வழி அப்பா, அம்மா, மற்றும் அம்மா வழி அப்பா, அம்மா) குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வட்டாட்சியர் அலுவலகங்கள் வழங்கிய சான்றிதழ்களில் மாணவரது தந்தை, தாய் ஆகியோரின் பெற்றோர் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இந்தச் சான்றிதழை பி.இ. மாணவர் சேர்க்கையை நடத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்க மறுக்கிறது. அதனால் வட்டாட்சியர் அலுவலகங்கள் அளிக்கும் சான்றிதழ் செல்லுபடியாகாத நிலை ஏற்பட்டு, சான்றிதழைத் திருத்தம் செய்ய வேண்டி மீண்டும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் படையெடுக்கும் நிலை உண்டாகியுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வரும் சான்றிதழ்களில் மாணவரது பெற்றோரின் தந்தை, தாய் பற்றிய விவரங்கள் இல்லாமல்தான் வருகின்றன. கல்விக் கட்டணச் சலுகையைப் பெறுவதற்கு இது போதாது. எனவே, அத்தகைய விவரங்களை உள்ளடக்கிய சான்றிதழை மாணவர்கள் அளிக்க வேண்டும். பி.இ. கலந்தாய்வுக்கு வரும்போது அந்த சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்' என்றார். முதல் தலைமுறை பற்றிய அரசாணையில் சான்றிதழ்களில் இடம் பெற வேண்டிய அனைத்து விவரங்கள் பற்றியும் முன் கூட்டியே வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அப்படியிருந்தும், மாணவரின் தந்தை, தாய் ஆகியோரின் பெற்றோர் பற்றிய விவரங்களை சான்றிதழ்களில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டன வட்டாட்சியர் அலுவலகங்கள்.
வட்டாட்சியர் அலுவலகங்களில் மாணவரது குடும்ப ரேஷன் அட்டையை வைத்து சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், அதில் அம்மா வழி தாத்தா, பாட்டி பற்றிய விவரங்கள் இல்லாததால் சான்றிதழில் அதைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் கூறுகின்றன. அரசின் கட்டணச் சலுகையைப் பெறுவதற்கு ஏற்கெனவே பெற்ற சான்றிதழ்கள் செல்லுபடியாகாது என்ற காரணத்தால் மாணவர்கள் தங்கள் சான்றிதழைத் திருத்தித் தரச் சொல்லி வட்டாட்சியர் அலுவலகங்களுக்குப் படையெடுக்கின்றனர்.அவர்களிடம், அதிகாரிகள், பெற்றோரது பெற்றோர் பற்றிய விவரங்களை வைத்திருப்பவர்கள், அதைக் கொடுங்கள்; பெற்றோரது பெற்றோர் இல்லாதவர்கள் அவர்கள் இல்லையென்று கூறி நோட்டரி பப்ளிக்கிடம் இருந்து பிரமாண பத்திரம் பெற்றுக் கொண்டுவந்து கொடுங்கள் என்று கூறுகின்றனர்.மாணவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று அவ்வாறு பத்திரத்தைப் பெறுவதில் சிரமம் உள்ளது.முதல் தலைமுறை மாணவர் என்றால் ஒரு மாணவரின் பெற்றோர் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் ஆகியோரைத்தான் குறிக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.அப்படியிருக்கும்போது, மாணவரது பெற்றோரின் தந்தை, தாய் பற்றிய விவரங்களைக் கேட்பது என்பது அரசின் நல்ல திட்டத்தை நீர்த்துப் போகவே செய்யும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்த ஆண்டு பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு கல்விக் கட்டணச் சலுகை ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்ததால் முதல் தலைமுறையைச் சேர்ந்த 78,086 மாணவர்கள் பி.இ. படிப்புக்கும், 6,440 பேர் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக