உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

வருவாய் இன்றி தவிக்கும் டெல்டா சிறு விவசாயிகள்: அரசு கண் திறக்குமா?

கடலூர்:
            கடலூர் மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் வருவாய்க்கு வழி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
             
              இம் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதியான 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களில், ஜூன் மாதம் குறுவை நெல் சாகுபடி தொடங்குகிறது.  கர்நாடகத்துடன் காவிரி நீர்த் தாவா தொடங்கியது முதல், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குறுவை சாகுபடி என்பது கானல் நீராகிவிட்டது. டெல்டா விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியையே பெரும்பாலும் மறந்து விட்டனர். ஆங்காங்கே ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை அறுவடை ஆகஸ்ட் மாதத்தில் நிறைவுபெறும்.  அதைத் தொடர்ந்து தென்மேற்குப் பருவமழை பொய்க்காமல், மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு நீர் இருந்தால், அத்துடன் வடகிழக்குப் பருவமழையும் உரிய காலத்தில் தொடங்கி விட்டால், 1.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி வெற்றிகரமாக நடைபெறுகிறது. அத்துடன் ஊடு பயிராக உளுந்து பயிரிட்டு அதுவும் விளைந்து விட்டால், டெல்டா விவசாயிகளின் மகிழ்ச்சிக்குத் தடையே இல்லை.  பருவநிலை சரியாக இருந்தால், சம்பா அறுவடை பிப்ரவரி முதல் வாரத்திலும், உளுந்து அறுவடை மார்ச் மாதக் கடைசியிலும் முடிவடைந்து விடும். ஏப்ரல் முதல்  செப்டம்பர் மாதம் வரை, வளமான 1.5 லட்சம் ஏக்கர் டெல்டா நிலங்கள், வாழ்விழந்து தரிசு நிலங்களாகக் காட்சி அளிக்கின்றன.  கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் டெல்டா நிலங்களை நம்பி, சுமார் 1 லட்சம் விவசாயிகள் உள்ளனர். 
              
                  இவர்களில் 80 ஆயிரம் பேர் ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலங்களின் உரிமையாளர்கள். 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தும் அவை 6 மாதங்கள் தரிசாகி விடுவதால். அந்த விவசாயிகளின் வாழ்க்கையையும் தரிசாகி விடுகிறது.  80 ஆயிரம் சிறு விவசாயிகளில் சுமார் 40 ஆயிரம் பேர், கட்டுமான வேலை உள்ளிட்ட மாற்று வேலைகளை நாடி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மற்றவர்கள் உள்ளூரில் மாற்று வேலைகளைத் தேடிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கான கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திலும் வேலை கிடைக்காது.  1.5 லட்சம் ஏக்கர் சொந்த நிலங்களைக் கொண்ட ஒரு லட்சம் விவசாயிகள், 6 மாதங்கள் வேலை ஏதுமின்றி, வருவாய்க்கு வழியின்றித் தவிக்கிறார்கள். எனவே கோடைக் காலத்தில் பலன் தரும், மாற்றுப் பயிர் சாகுபடித் திட்டம் தேவை என்கிறார்கள், அப்பகுதி விவசாயிகள். தமிழக வேளாண் துறையும், வேளாண் பல்கலைக் கழகங்களும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய திட்டங்களை வழங்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். 
 இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவரும் காவிரியின் கடைமடை விவசாயியுமான பி.ரவீந்திரன் கூறியது: 
               கடலூர் மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் சுமார் 80 ஆயிரம் பேர் மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை வேலையேதும் இன்றி சும்மா இருக்கிறார்கள். வருவாய்க்கு வழியில்லை. பலர் மாற்று வேலைகளைத் தேடி இடம் பெயர்ந்து விடுகிறார்கள்.  இத்தகைய நிலைகளை ஆராய, 2 ஆண்டுகளுக்கு முன் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கன்னையன் தலைமையிலான குழு சிதம்பரத்துக்கு வருகை தந்தது.  அக்குழுவிடம் டெல்டா விவசாயிகளின் நிலையை எடுத்துரைத்தோம். அக்குழு என்ன பரிந்துரைத்து என்றும், இதுபற்றி மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன என்று தெரியவில்லை. 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடப்பதை மாற்றி அமைக்க தமிழக அரசு திட்டம் தயாரிக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior