கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முதல் கட்டமாக 33 வார்டுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதியுள்ள 13 வார்டுகள் 2வது கட்டமாக பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சண்முகம் பிள்ளைத்தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, அங்காளம்மன் கோவில் தெருக்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் செம்மண்டத்தில் துவங்கி மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் இணையும் இந்த சாலை 100 அடி அகலம் இருப்பதால் அரசு மருத்துவமனை சாலைக்கு மாற்று சாலையாக அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாத மழையில் நெல்லிக்குப்பம் சாலை பெரிதும் பாதிக்கப்பட்ட போது பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சண்முகம் பிள்ளைத்தெரு வழியாக திருப்பி விடப்பட்டன.
அதுவரை சிறந்த நிலையில் இருந்த சாலை கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்றதால் சாலைகளில் ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமானது. மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள சாலையில் ஜல்லி பெயர்ந்து யானைப் பிடிக்கும் பள்ளமானது. இதன் காரணமாக லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதாள சாக்கடைத் திட்டப்பணி செயல் படுத்தாத காரணத்தால் இந்த சாலையாவது நகராட்சி உடனே போட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் - செம்மண்டலம் சாலைக்கு மாற்று சாலையாக கருதி தரமாக போடப்பட்டால் தான் எதிர்காலத்தில் வாகனங்கள் சென்றால் பழுதடையாமல் இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக