அறுவடை செய்யப்பட்ட பாகற்காய்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக சாக்குப் பைகளில் அடைக்கும் விவசாயிகள்.
உளுந்தூர்பேட்டை:
விருத்தாசலம் வட்டம் மணக்கொல்லை கிராமம் பாகற்காய் விவசாயத்தால் தன்னிறைவு பெற்று சிறந்து விளங்குகிறது.
இந்த கிராமத்தில் ஆரம்ப காலத்தில் தண்ணீர் இன்மையால் விவசாயம் பின் தங்கிய நிலையில் இருந்து வந்தது. அதனால் கோடைக்காலத்தில் 3 மாத முந்திரி விவசாயத்துக்குப் பிறகு இப்பகுதி மக்கள் பிழைப்புக்காக அருகிலுள்ள நெய்வேலி அனல்மின் நிலைய சுரங்கப் பணிக்கு கூலி வேலைக்கு சென்று வந்தனர். இக்கிராமத்தில் ஒரு சிலர் 600 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர் கண்டுபிடித்ததால் இப்பகுதியில் விவசாயம் செழிப்படையத் தொடங்கியது. முதலில் தோட்டப் பயிரான பாகற்காயை பயிர் செய்ய கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினர். பின்னர் நாளடையில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து தற்பொழுது வீட்டுக்கு ஒரு ஏக்கர் அல்லது அதற்குமேல் பாகற்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாகற்காய் விவசாயம் அவ்வூர் மக்களை மேன்மையடைய செய்துள்ளது.
பாகற்காய் பயிரிடும் முறை: நிலத்தை முதலில் நன்கு உழுது, பின்னர் தொழு உரம் (மக்கிய குப்பை) நிலத்தில் தெளித்து, நிலத்தில் 2 மீட்டர் இடைவெளி விட்டு 2 அடி அகலம் ஒரு அடி ஆழத்துக்கு குழி தோண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் குழிக்கு அடியுரம் இட்டு குழிக்கு 5 முதல் 7 விதை ஊன்றி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் 7 நாள்களுக்கு நீர் தெளித்து வரவேண்டும். பின்னர் பாத்தி கட்டி நீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தில் குச்சிகளை நட்டு கம்பிகளால் பந்தல் அமைத்துகொள்ள வேண்டும். பாகற்கொடி பந்தலில் படரத் தொடங்கியுடன் 40 நாள்களில் காய்க்கத் தொடங்கிவிடும். அதிலிருந்து வாரத்துக்கு இருமுறை காய்களை பறிக்கவேண்டும்.
இந்த விவசாயத்துக்கு மருந்து அதிகம் தேவைப்படும். 6 மாத காலம் கொண்ட இப்பயிரால் ஏக்கருக்கு 10 டன் முதல் 15 டன் வரை பாகற்காய் கிடைக்கிறது. ஒரு டன் பாகற்காய் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விலை போகிறது. இந்த விவசாயத்தில் செலவு போக ஏக்கருக்கு ரூ.1.50 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கிறது. இவ்விவசாயத்தை இருளக்குறிச்சி, மோகாம்பரிக்குப்பம், இராமநாதபுரம், ஆலடி, மேற்கிருப்பு, முடப்புள்ளி, உளுந்தூர்பேட்டை வட்டம் வானம்பட்டு, மட்டிகை, கல்லமேடு, தொப்பையான்குளம், ஒடப்பன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களிலும் தற்பொழுது விவசாயம் செய்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் பயிரிடப்படும் பாகற்காய்களை சென்னை கோயம்பேடு, கும்பகோணம், பண்ருட்டி, புதுச்சேரி, திருச்சி, ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து வியாபாரிகள் நேரிடையாக வந்து கொள்முதல் செய்துகொள்கின்றனர்.
பயன்கள்:
பாகற்காயில் மருத்துவ குணங்கள் உள்ளதால் சர்க்கரை நோயாளிக்கு உகந்ததாகவும், குடற்புழுக்களை கட்டுப்படுத்தவும், நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு உகந்ததாகவும் உள்ளது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாகற்காயை பயன்படுத்தக்கூடாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக