விருத்தாசலம்:
விருத்தாசலத்திலிருந்து கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள தரைப்பாலங்களில் தடுப்புகள் உடைந்து கிடப்பதால் அதிக விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
விருத்தாசலத்திலிருந்து திருச்சி மற்றும் ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சிக்கு இடைப்பட்ட பகுதியில், மழைக்காலங்களில் கார்மாங்குடி காட்டுப் பகுதியில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக தரைப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 45 கன்மாய் முதல் 2 கன்மாய் கொண்ட 7 தரைப்பாலங்கள் உள்ளன. இந்தத் தரைப்பாலங்களில் பெரும்பாலானவற்றில் தடுப்புகள் உடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை கட்டப்படவில்லை. விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி சாலை வழியாகத்தான் பெண்ணாடம் பகுதிகளில் உள்ள சிமென்ட் ஆலை மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு கனரக வாகனங்கள் செல்கின்றன.
மேலும் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் வருகின்ற போது தடுப்புகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் தடுப்புகள் இல்லாததால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். தரைப்பாலங்களில் எஞ்சி உள்ள தடுப்புகளும் விரிசல் ஏற்பட்டும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளன. பாலத்தோடு கான்கிரீட் இணைப்பு இல்லாமல் கட்டப்பட்டதே தடுப்புகள் அடிக்கடி உடையும் நிலைக்கு காரணம். எனவே இனி தடுப்புகள் அமைக்கும் போது தரையில் இருந்து தூண்கள் அமைத்து தடுப்புகள் அமைக்க வேண்டும். அல்லது பாலத்தின் மேல் கட்டுகின்றபோது பாலத்துக்கும், தடுப்புக்கட்டைக்கும் கான்கிரீட் அமைத்து தடுப்புகள் அமைத்தால், அடிக்கடி உடைந்து விழாமல் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சிக்கு இடைப்பட்ட தரைப்பாலங்களில் உடைந்த தடுப்புகளை உடனடியாக அமைத்து, அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக