உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

அடிப்படை வசதிகள் இல்லாத பெரியார் நினைவு சமத்துவபுரம்


சிறுவர் விளையாட்டுத் திடல் அருகே தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர்.
பண்ருட்டி:

            பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என அப் பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் ஊராட்சியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் ரு.158 லட்சம் செலவில், 100 வீடுகள், விளையாட்டுத் திடல், பூங்கா உள்ளிட்டவைகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெறாத நிலையில் திறப்பு விழாவுக்கான தேதி முடிவு செய்யப்பட்டதால் அவசரக் கோலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் 20.9.2009-ல் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா நடைபெற்று 9 மாதங்களே ஆன நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள்  பல்வேறு குறைகளைத் தெரிவித்தனர்.

              சமத்துவபுரத்தில் உள்ள வீதிகளின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் வெட்டப்பட்டுள்ளதே தவிர கால்வாய் கட்டப்படவில்லை. இதில் மண் சரிந்தும், செடிகள் முளைந்தும் உள்ளதால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. சிறுவர் விளையாட்டுத் திடல் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ரூ5.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா பராமரிப்பு இன்றி அதில் உள்ள மின் விளக்குகள் கழன்று தொங்கிக் கொண்டுள்ளது. முந்திரிக் காடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த குடியிருப்பு வீதிகளில் ஓரிரு விளக்குகளைத் தவிர மீதமுள்ள விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் தெரு விளக்கும், குடியிருப்புகளைச் சுற்றிலும் சுற்றுச் சுவரும் அமைத்துக் கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும் என சமத்துவபுரத்தைச் சேர்ந்த மக்கள் கூறினர்.

இது குறித்து பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண்குமாரிடம் கேட்டதற்கு, 

             ""வீதிகள் ஓரம் வெட்டப்பட்டுள்ள பள்ளம் மழை நீர் வழிந்தோட தான் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவு நீர் கால்வாய் கட்டும் திட்டமில்லை. தெரு விளக்கு, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சம்மந்தப்பட்ட ஊராட்சிக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். தமிழக முதல்வரின் கனவு திட்டமான சமத்துவபுரத்தில் இப்படி சில குறைகள் இருப்பது ஆட்சியாளருக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் கவலை தருவதாகும் என அப்பகுதி மக்கள் கவலையுடன் கூறினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior