உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

இந்தியா - நிகழ்வுகள் 2009


 ஜன. 8
 
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ, 7 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். சர்வதேச பொருளாதார வீழ்ச்சி மற்றும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் விவகாரம் போன்ற பின்னடைவுகளின் எதிரொலியால், ஐ.டி.  நிறுவனங்களிலும் ஆட்குறைப்பும், சம்பள குறைப்பும் செய்யப்பட்டதால் பலர் பாதிப்படைந்தனர்.


ஜன. 27 


முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தனது 98 ஆவது வயதில் காலமானார். தஞ்சையில் பிறந்த இவர்,  நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். 

ஜன. 27

இலங்கையில் போர் வலுவான நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு பயணம் மேற்கொண்டார். அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.


பிப். 18
 
நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்தது.

மார்ச் 5 

நாட்டின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக, நவீன் சாவ்லாவை மத்திய அரசு நியமித்தது. இந்த நியமனத்துக்கு, ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஒப்புதல் வழங்கினார்.


மார்ச் 6

நியூயா‌ர்‌க்‌கி‌ன் பழ‌ம்பொரு‌‌ள் கா‌ட்‌சியக‌த்‌தி‌‌ல் இருந்த மகா‌த்மா கா‌ந்‌தி‌‌ பய‌ன்படு‌த்‌திய க‌ண்ணாடி, பா‌க்கெ‌ட் கடிகார‌ம், ஒரு ஜோடி  கால‌ணிக‌ள், த‌ட்டு, குவளை ஆகிய ஐந்துப் பொரு‌ட்க‌ளை, அவற்றின் உ‌ரிமையாள‌ர் ஜே‌ம்‌ஸ் ஓடிஸ் என்பவர் ஏலத்தில்  விட்டார். அவற்றை 8 லட்ச அமெரிக்க டாலர்கள் கொடுத்து, இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா ஏலத்தில் வாங்கினார். 

மார்ச் 18

உத்தரபிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வருண்காந்தி,  சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31

1993 மு‌ம்பை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் த‌ண்டனை பெ‌ற்ற இ‌ந்‌தி நடிக‌ர் ச‌ஞ்ச‌ய் த‌த்‌துக்கு, ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடுவதற்கு அனும‌திய‌ளி‌‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌த்து‌வி‌ட்டது.

ஏப். 2

கடந்த 1984 ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜகதீஷ் டைட்லரை குற்றமற்றவர் என சிபிஐ விடுவித்தது. இது, எதிர்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

 ஏப். 7

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது பத்திரிகையாளர் ஒருவர் செருப்பை வீசியதால், டெல்லியில் இன்று பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் டைட்லர் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர்  ஒருவர் இந்த செய்கையில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக, ஏப்ரலில் 16 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்  கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி மீது செருப்பு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.

ஏப். 27:

இலங்கையில் போரினால் பாதிப்புக்குள்ளான தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்தார்.

ஏப். 29

போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து குவாத்ரோச்சியின் பெயரை சி.பி.ஐ. நீக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மே 17

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 261 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.

மே 22

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், நாட்டின் 18 ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றுக் கொண்டார். அவர் பிரதமராகப் பதவியேற்றது, தொடர்ந்து இரண்டாவது முறையாகும்.

மே 25

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் சீக்கிய மதகுரு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானாவில் கலவரம் வெடித்தது. ரயில்கள், பேருந்துகளுக்குத் தீவைக்கப்பட்டது. ராணுவம் வரவழைக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.

ஜூன் 3

மக்களவை சபாநாயகராக மீரா குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் மக்களவை  சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 ஜூன் 12

எச்1என்1 வைரஸ் கிருமியால் உண்டாகும் பன்றி காய்ச்சல் நோய், இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெகுவாக பரவியது.  இந்தியாவில் 15 பேருக்கு இந்நோய் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் பீதி நிலவியது. பன்றி  காய்ச்சல் நோயை நினைத்து பீதி அடைய வேண்டாம், அந்நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என்று மத்திய அரசு கூறியது. ஆண்டின் இறுதி வரை பன்றிக் காய்ச்சலின் தாக்குதல் இருந்து கொண்டே இருந்தது. இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 852 ஐ தொட்டதாக டிசம்பர் 26-ல் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.


ஜூன் 13

நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். இந்த யோசனைக்கு ஆதரித்தும் எதிர்த்தும் குரல்கள் எழுந்தன. பல்வேறு விவாதங்களும் நடத்தப்பட்டன. பின்னர், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று கபில் சிபல் தெரிவித்தார்.


ஜூன் 30

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான லிபரான் விசாரணை கமிஷன் அறிக்கை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 2
 
இயற்கைக்கு மாறானது என்ற வகையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கலாம் என்று கூறும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 377-வது பிரிவு இனி செல்லாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்த விவகாரம், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தைத் தூண்டியது.

ஜூலை 20

மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது கைதான பயங்கரவாதி முகமது அஜ்மல் கஸாப் தன் மீதான குற்றங்களை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பின்பு ஆண்டின் இறுதியில், தாம் குற்றமற்றவன் என்று பல்டியடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
  
ஜூலை 20

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, அமெரிக்காவின் கான்டினென்டல் ஏர்வேஸ் நிறுவனம் பாதுகாப்பு  சோதனைக்கு உட்படுத்தி விவாகரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது, நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பின்னர், அந்த  நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியதால் பிரச்னை ஓய்ந்தது.

ஜூலை 26

ரூ.14 ஆயிரத்து 500 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை, பிரதமர்  மன்மோகன் சிங் இயக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் உள்ள அமெரிக்கா, ரஷியா, பிரான்சு, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்தது.

ஜூலை 27
 
ஜம்மு - காஷ்மீரின் சோஃபியான் என்ற இடத்தில் 2 இளம் பெண்களை மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் கற்பழித்துக், கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், அந்தப் பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர், இந்த வழக்கில் போலீசாருக்கு தொடர்பு இல்லை என்று டிசம்பரில் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் போராட்டங்கள் வெடித்தன.

ஆக. 4

நாட்டில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆக. 9

பெங்களூருவில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல் அமைச்சர் கருணாதி திறந்து வைத்தார். அதன்  தொடர்ச்சியாக, சென்னையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று கன்னட கவிஞர் ச‌ர்வ‌க்ஞ‌ர் ‌சிலையை, க‌ர்நாடக முதலமை‌ச்ச‌ர்  எடியூர‌ப்பா திற‌ந்து வை‌‌த்தா‌ர்.


ஆக. 19
 
முகம்மது அலி ஜின்னாவைப் புகழ்ந்து புத்தகம் எழுதியதன் காரணமாக, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து, அதன் மூத்தத்  தலைவர் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டார். அவரது புத்தகத்துக்கு குஜராத் அரசு தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக,  பி.ஜே.பி.யை சாடி பல கருத்துகளை ஜஸ்வந்த் சிங் வெளியிட்டது தலைப்புச் செய்திகளாயின.

ஆக. 30

நிலவை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து,  சந்திராயன் 1 திட்டப் பணிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் மாதவன் நாயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விண்கலத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், சந்திராயன் தனது பணிகளில் 95 சதவீதத்தை அறிவியல்பூர்வமாக பூர்த்தி செய்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தில் முழு வெற்றியே  கிட்டியுள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார்.

 அந்த நிலையில், செப். 24-ல் சாதகமான செய்தி வெளியானது.  நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை இந்தியா அனுப்பிய 'சந்திரயான்-1' செயற்கைக்கோள் கண்டுபிடித்தது. இது,  இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு மை௦ல்கல்லாகும். இந்த செய்தியை வெளியிட்ட  இஸ்ரோ தலைவர் மாதவன்  நாயர், "வேறு எந்த நாட்டு செயற்கைக்கோள்களும் இத்தகைய தடயங்களைத் திரட்டியது இல்லை," என்றார். 

செப். 3

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். சுமார் 26 மணி நேர தீவிரத்  தேடுதலுக்குப் பிறகே, ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 5  பேரும் பலியானதை, இந்திய விமானப் படை உறுதி செய்தது.


செப். 7

2009-10 ஆம் கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.சி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். அதற்கு பதிலாக, கிரேடிங் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாணவர்கள் விருப்பப்பட்டால் பொதுத்தேர்வு எழுதலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

செப். 11

நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை வழக்கில் இருந்து மொனீந்தர் சிங் பந்தேரை விடுவித்து, அலகாபாத் உயர்  நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், அவரது வேலைக்காரர் சுரீந்தர் கோக்லியின் தண்டனையை ஐகோர்ட் உறுதி  செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செப். 19

சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய அரசு சுறுசுறுப்பானது. 'காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தி விமானத்தில் குறைந்த கட்டண வகுப்பில் பயணம்', 'காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ரயிலில் பயணம்,'  போன்ற சிக்கன நடவடிக்கைகள் முதல் பக்க செய்திகளாயின. 
பிறகு, விமானத்தில் எகனாமிக் கிளாஸை கால்நடை வகுப்பு என்கிற ரீதியில் கிண்டல் செய்து டிவிட்டரில் எழுதினார்,  இணையமைச்சர் சசி தரூர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவருக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்தும் குரல் எழுந்தன. இறுதியில், அவர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

செப். 30

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்பாக, இத்தாலிய தொழில் அதிபர் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. 

செப். 30
 
தமிழக-கேரள எல்லையில், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் அமைந்துள்ள தேக்கடி ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற  படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்புப் படையினர் 3 நாட்களாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மொத்தம்  68 பேர் இறந்தது தெரியவந்தது.

அக். 2
 
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் அமோசி தரன் பைரா என்ற கிராமத்தில் புகுந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள், கிராமத்தினர் 16 பேரை சுட்டுக் கொன்றனர். ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளில் அச்சுறுத்தல் தொடர்ந்தது.


அக். 7

முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ஆணைக்கு தடை கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

அக். 22
 
மகாராஷ்டிரா, அருணாசல பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

அக். 28
 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சீதாபுரா என்ற இடத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அணைக்க முடியாமல் ஐந்து நாட்கள் கொழுந்துவிட்டு தீ எரிந்தது. இதனால்  ரூ.150 கோடி மதிப்புள்ள பெட்ரோல், டீசல் எரிந்து நாசமானது. 12 பேர் பலியானார்கள்.

நவ. 2
 
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்பட உச்ச நீதிமன்றத்தின் 21 நீதிபதிகள் தங்கள் சொத்து கணக்கை வெளியிட்டனர்.

நவ. 2

காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள கால்சியான் கிராமத்தில், தனது வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதியின் துப்பாக்கியை பறித்து,  அவனையே சுட்டுக் கொன்ற வீரப்பெண் ருக்சானாவுக்கு காஷ்மீர் போலீசில் சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டது.

நவ. 2
 
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா மீது ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் புகார் எழுந்தது. இது, நாடு முழுவதும்  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்ட மதுகோடாவிடம், வருமான வரித்துறை  அதிகாரிகள் 72 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நவ. 16

மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்பன போன்ற முழக்கங்களுக்கு மத்தியில், 'மும்பை அனைவருக்கும் சொந்தம்' என்று  பேசினார் சச்சின் தெண்டுல்கர். இந்தக் கருத்துக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து  பால்தாக்கரேவுக்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நவ. 19

கரும்பு விலையை மாநில அரசுகள் நிர்ணயிக்க முடியாது என்ற மத்திய அரசின் ஆணையை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில்  மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் செய்தனர். இதற்கிடையே தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கரும்பு விலை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது.

நவ. 23

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கையில் உள்ள விவரங்கள் பத்திரிகை ஒன்றில் வெளியானதால்  மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்பே வெளியானதால்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

நவ. 24

லிபரான் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாரதிய ஜனதா மூத்த  தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி உள்பட 68 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்ததால் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தன.

நவ. 25

இந்திய விமானப்படையில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் அதிநவீன 'சுகோய்-30' ரக போர்  விமானத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 800 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சாதனை படைத்தார்.

நவ. 26

2011 ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய மனிதவள  மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நவ. 30

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தங்களது கேள்விகளை கேட்க வேண்டிய உறுப்பினர்கள் 28 பேர் அவையில்  இல்லாததால், மக்களவை கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அவையை ஒத்திவைத்த சபாநாயகர் மீராகுமார், "கடந்த 20  ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை," என்றார்.

டிச. 9
 
தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் உடல் நிலை மோசம் அடைந்தது. இதனால், தனி தெலுங்கானா போராட்டம் தீவிரம்  அடைந்த நிலையில், தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தெலுங்கானாவைச் சுட்டிக் காட்டி, மேற்குவங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  வலுவாகியது. மேலும் சில மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகள் பிரிவினைக் குரலை எழுப்பின.

டிச. 10

தனி தெலுங்கானா கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதால், ஆந்திராவில் வேறு வடிவில் பிரச்னைகள் தீவிரமாயின. தனி மாநில முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவின் கடலோர மட்டும் ராயலசீமா பகுதிகளில் தொடர்ச்சியாக முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்றது. இதனால் நெருக்கடுக்குள்ளான மத்திய அரசு, இவ்விவகாரத்தில் சுமுக முயற்சி ஏற்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது.

டிச. 10

கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய கடல் மீன்பிடி தொழில்  சட்ட மசோதாவை, மத்திய அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்ய இருந்தது. இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இதையடுத்து, இந்த மசோதாவை நடப்பு  கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட மாட்டாது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் அறிவித்தார்.

டிச.17

தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு பச்சைக் கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

டிச. 19

பாரதிய ஜனதாக் கட்சியின் புதிய தேசிய தலைவராக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பதவியேற்றுக் கொண்டார்.

டிச.23
 
தனி தெலுங்கானாவுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டங்கள் வலுபெற்ற நிலையில், தனி மாநிலம் அமைக்கும் திட்டத்தை நிற்த்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசு அடித்த பல்டியை அடுத்து, ஆந்திராவின் தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி இரண்டு நாள் பந்த் அறிவித்தது. பின்னர், கிறிஸ்துமஸை ஒட்டி, டிச.25 பந்த் வாபஸ் பெறப்பட்டது.

டிச. 25

தெலங்கானா மாநிலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால், தெலங்கானா பகுதியில் மீண்டும் கலவரம் வெடித்தது. பேரு‌ந்துக‌ள், ர‌யி‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கு ‌தீ வை‌ப்பு, கலவரத்தை ஒடுக்க தமிழகம், டெல்லியில் இருந்து கூடுதல் படைகள் விரைந்தன. 
  
த‌னி‌த் தெல‌ங்கானா கோ‌ரி தெல‌ங்கானா பகு‌தியை‌ச் சே‌ர்‌ந்த 13 ஆ‌ந்‌திர அமை‌ச்ச‌ர்க‌ள் த‌ங்களது பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌விலக முடிவு செய்தனர். 26

டிச.26

ஹரியானாவில் இளம் டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தற்கொலைக்குத் தள்ளப்பட்ட வழக்கில், முன்னாள் டி.ஜி.பி. ரத்தோருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்தோருக்கு எதிராக போர்க்கொடி எழுந்தன. இந்தச் சூழலில், ரத்தோரின் போலீஸ் பதக்கத்தைப் பறிகக்வும், ஓய்வூதியப் பயன்களைக் குறைக்கவும் உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக, விளக்கம் கேட்டு ரத்தோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிச.26
 
ஒரு புறம் ஆந்திராவில் தெலுங்கானா விவகாரம் அனல் பறக்க மற்றொரு புறம் ஆளுனர் மீதான செக்ஸ் புகார் பிரச்னையை கிளப்பியது. பாலியல் புகாருக்கு ஆளான ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி தனது ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அக்கடித்தத்தில் தனது உடல்நலக் குறைவால் விலகுவதாக குறிப்பிட்டிருந்தார். 

டிச. 26

தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான கால வரம்புடன் கூடிய உறுதிமொழியை மத்திய அரசு அறிவிக்க வேண்டு்ம் என்றும், அவ்வாறு அறிவிக்கத் தவறினால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெலங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்தது. இதனிடையே, உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

டிச.26
 
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபு சோரன், தனக்கு ஆதரவு தரும் 43 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை ஆளுநரிடம் நேரில் சமர்ப்பித்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு அளித்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior