உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

சர்வதேசம் - நிகழ்வுகள் 2009

ஜன. 2 

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே போர் தீவிர மடைந்த நிலையில், புலிகளின் தலைமையகமான  கிளிநொச்சியை ராணுவம் பிடித்துவிட்டதாக, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.


ஜன. 8

இலங்கை அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து எழுதிவந்த, கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழான  சண்டே லீடரின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கா, அடையாளம் அறிமுடியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜன. 20 

அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றுக் கொண்டார். கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க அதிபராவது இதுவே முதல் முறை என்ற சரித்திர சிறப்பைப் பெற்றார். 

ஜன. 27 

இலங்கையில் போர் வலுவான நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு பயணம் மேற்கொண்டார். அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். 

மார்ச் 3
 
பாகிஸ்தானின் லாகூரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சங்ககாரா, மெண்டிஸ் உள்பட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 6 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர், கிரிக்கெட் தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு பத்திரமாக  இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.

மார்ச் 23 

புற்றுநோயால் அவதியுற்று வந்த இங்கிலாந்து டி.வி. நடிகை ஜேட் கூடி மரணமடைந்தார். நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்ற  பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியால் உண்டான சர்ச்சைகள் மூலம் வெகுவாக அறியப்பட்டவர், ஜேட் கூடி. 

ஏப்.14 

மனிதாபிமான நோக்கமும் அரசியல் தீர்வுக்கான அடித்தளமும் அனைத்துலக அனுசரணையும் கொண்ட நிரந்தர போர் நிறுத்தமே தேவை என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது.  

ஏப். 26 

உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இன்று முதல் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக விடுதலைப் புலிகள் அறிவித்தது. ஆனால், அதனை இலங்கை அரசு திட்டவட்டமாக நிராகரித்தது.

மே.18 

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததாக, இலங்கை அரசு தொலைக்காட்சி சேனல் தகவல் வெளியிட்டது. இலங்கை அரசு தரப்பில் இருந்து அந்த தகவல் வந்தது. 

முன்னதாக , விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களான என்.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மரணமடைந்ததாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.   பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டணியின் உடலை, இலங்கை ராணுவம் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முடிவில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக, இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து.

மே 19 

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உடலைக் கண்டுபிடித்துள்ளதாக, இலங்கை ராணுவம் அறிவித்தது.  அதுதொடர்பான, வீடியோக்களும் படங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. எனினும், பிரபாகரன் மரணத்தில் சர்ச்சைகள் தொடர்ந்தன.

மே 30

உலகில் 53 நாடுகளைச் 15,510 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. பல நாடுகளிலும் பன்றிக் காய்ச்சல் பரவியது. இதனால், மூன்று மாதங்களுக்கும் மேலாக பீதி நிலவியது. 2009-ல் உலகை உலுக்கிய நிகழ்வுகளுள் பன்றிக்காய்ச்சலுக்கு முக்கியப் பங்குண்டு. பின்னர், டிசம்பர் மாதத்தில் இந்நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் சுமார் 11,500 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மே 27 

ஆஸ்திரேலியாவில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஷரவண் குமார் என்ற மாணவன் கடுமையாக தாக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ஆண்டு முழுவதும் 40க்கும் மேற்பட்ட முறை இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின. இது தொடர்பாக இரு நாட்டு தரப்பில் பேச்சுவார்த்தைகளும் அவ்வப்போது நடைபெற்றன. 

ஜூன் 1
 
பிரேசில் நாட்டில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி புறப்பட்டுச் சென்ற ஏர் - பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 228 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 25 

உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன் தனது 50வது வயதில் மரணமடைந்தார். அவரது இழப்பு, உலகம்  முழுவதுமுள்ள அவரது ரசிகர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியது. அதன்பின், மைக்கேல் ஜாக்சனின் மரணம் குறித்த சர்ச்சை  தொடர்ந்தது.

ஆக. 6  

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராகவும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனராகவும் செயல்பட்டு வந்த கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்தது. 

ஆக. 23 

பஹாமஸ் நாட்டின் அட்லாண்டிஸ் பாரடைஸ் தீவில் நடந்த அழகிப் போட்டியில் 18 வயது வெனிசுலா நாட்டு அழகி  ஸ்டெஃபானியா, 'மிஸ் யுனிவர்ஸ்' அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆக. 31 

இலங்கைப் போர் நடவடிக்கைகளில் அரசை விமர்சித்து எழுதிவந்த இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் திசநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக  உலக அளவில் பல்வேறு சமூக அமைப்புகளும் குரல் கொடுத்தன. திசநாயகத்தை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமாவும் வலியுறுத்தியிருந்தார்.
செப். 6 
காஷ்மீரில் லடாக் பகுதியில் மவுண்ட் கயா என்ற குன்று அருகே இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த விவகாரம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இந்திய பகுதிக்குள் தங்களது ராணுவம் அத்துமீறி ஊடுருவவில்லை என்று சீன அரசு மறுத்தது.
    
செப். 30 

நியூஸிலாந்து அருகேயுள்ள அமெரிக்க சமோயா தீவு அமைந்துள்ள தெற்கு பசிபிக் கடலுக்கு அடியில் கடுமையான நிலநடுக்கம்  ஏற்பட்டது. இதையடுத்து, சமோயா மற்றும் அமெரிக்கன் சமோயாவில் சுனாமி தாக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

அக். 7
 
2009-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசை தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டெயிட்ஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோனாத் ஆகியோரும் இவருடன் பரிசை பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.  வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு நோபல் கிடைத்ததில், தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவே கொண்டாடியது.

அக். 9
 
அணு ஆயுத குறைப்பு நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொண்டதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

அக். 17
 
புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக, மாலத்தீவு நாட்டில் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் அதிபர் முகமதுநஷீத் தலைமையில் அமைச்சர்கள் ஸ்கூப் உடை அணிந்து கலந்து  கொண்டனர். புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நவ. 8
 
இலங்கையில் முப்படைகளின் தளபதி சரத் ஃபொன்சேகா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர், எதிர்வரும் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தன. 

நவ. 8
 
இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்டதாக அமெரிக்காவில் கைதான டெவிட் ஹெட்லி, தஹாவுர் உசைன் ராணா ஆகியோர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்தது. 

நவ. 13
 
"ராணுவ புரட்சி நடத்துவேன் என பயந்து அதிபர் ராஜபக்சே என்னை பணிமாற்றம் செய்தார். அத்துடன் ராணுவத்தை உஷார்  நிலையில் வைத்துக் கொள்ளுமாறு இந்தியாவையும் அவர் கேட்டுக் கொண்டார்," என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி  சரத் பொன்சேகா அடுத்தடுத்து புகார்களை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நவ. 14
 
பிரதமரின் தூதுவராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்றார். அங்கு அவர் பேசுகையில் "அனைத்து  தரப்பினரும் பயனடையும் வகையில் இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்," என்று  வலியுறுத்தினார்.

நவ. 26 

இலங்கை அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகாவை பொது  வேட்பாளராக நிறுத்தப் போவதாக, எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.

நவ. 27 

இலங்கையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

டிச. 18 

புவிவெப்பமடைவதை தடுக்கும் நடவடிக்கையாக, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்றது. மொத்தம் 113 நாட்டுத் தலைவர்களும்  பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் குறிப்பிடத்தக்க உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. வளர்ந்த நாடுகள்,  முக்கிய வளரும் நாடுகள் மற்றும் சிறிய ஏழை நாடுகள் இடையே எவ்வித ஒப்பந்தமும் ஏற்படவில்லை. எனினும் இந்தியா,  சீனா உள்ளிட்ட பேசிக் நாடுகளுடன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக  அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்த மாநாடு தோல்வி என்பதே உண்மை.

டிச.21
 
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் அவர்களுடைய குடும்பத்தினரும் எவ்வாறான சூழ்நிலையில் கொல்லப்பட்டனர் என்பது குறித்து விளக்கமளிக்குமாறு இலங்கை அரசை ஐ.நா. கேட்டுக்கொண்டது.

டிச. 25
 
ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தானு‌க்கு கூடுத‌ல் படைகளை அனு‌ப்ப‌ப் போவதாக அமெ‌ரி‌‌க்கா அ‌றி‌வி‌த்திருந்த நிலையில், அமெ‌ரி‌க்கா‌வுக்கு எ‌திரான தா‌க்குதலை ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்போவதாக தா‌லிபா‌ன் பயங்கரவாத அமைப்பு ‌அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

டிச. 25

வாடிகனில் கி‌றி‌ஸ்தும‌ஸ் ‌தின‌ச் ‌சி‌ற‌ப்பு ‌பிரா‌த்தனை‌யி‌ன் போது போ‌ப் ஆ‌ண்டவ‌ர் ‌மீது ஒரு பெ‌ண் தா‌க்குத‌ல் நட‌த்‌தினா‌ர். இ‌தி‌ல் ‌‌நிலை தடுமா‌றி ‌விழு‌ந்தார், போ‌ப் ஆ‌ண்டவ‌ர் 16 ஆ‌ம் பெனடி‌க்‌ட். பின்னர், அவரை பாதுகாவலர்கள் உதவியுடன் எழுந்தார். அவருக்கு காயமேதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவரைத் தாக்கிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிச. 26
 
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, அவர்கள் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. இதனால், இந்தியர்கள் பலரும் பயன்பெறுவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior