சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று (31ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு பல்வேறு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்து வருகிறது. தேர்த்திருவிழா இன்று நடக்கிறது.
அதிகாலை 5 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையில் இருந்து தேருக்கு எழுந்தருள செய்து தேர் நகர வீதிகள் வழியாக வலம் வருகிறது. நிலைக்கு வந்த பிறகு தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து ஏக கால லட்சார்ச்சனை நடக்கிறது. புத்தாண்டு தினமான 1ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடராஜர் சமேத சிவகாம சுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
அதனை தொடர்ந்து மீண்டும் சுவாமிகளை ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதியுலா, அர்ச்சனைகள் நடக்கிறது. பகல் 2 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசனம் நடக்கிறது. தேர் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரிசனமான 1ம் தேதி அதிகாலை 12.21மணிக்கு சந்திர கிரகணம் வருவதால் பூஜைகள் முன்கூட்டியே முடிக்க தேர் வடக்கு வீதி சந்திப்பில் நிற்காமல் நேராக நிலைக்கு வருகிறது. மாலை 4 மணி அளவில் சாமி தேரில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு பூஜைகள் நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக