உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

தமிழகம் - நிகழ்வுகள் 2009

ஜன. 12

 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்பட்டதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, திருமங்கலம் இடைத்தேர்தல். இதில், தி.மு.க. வேட்பாலர் லதா அதியமான் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

ஜன. 18
 
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்‌த ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி, உண்ணாவிரதம் மேற்கொண்டார், ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன். பின்னர், நான்காவது நாளில் தமிழக  தலைவர்கள் சிலரது வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை அவர் கைவிட்டார்.

ஜன. 23
 
இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்து, தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தையைத் துவக்க  வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முத்துக்குமாரின் உயிர்த் தியாகம்!


ஜன. 29 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதையும், போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தி, முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து மரணமடைந்தார். இந்தத் துயர நிகழ்வு, இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் விவகாரத்தில் முத்துக்குமாரின் குருதியால் புதுரத்தம் பாய்ந்தது. ஆனால், போராட்டங்களுக்கு பல்வேறு வடிவங்களில் முட்டுக்கட்டைகள்
வந்தன.

பிப்.1 

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, தமிழக முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்  போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, மாநிலம் முழுவது‌ம் அரசு, த‌னியா‌ர் க‌ல்லூ‌ரிகளையு‌ம், அதனோடு இணை‌ந்த விடு‌திகளையு‌ம் மறு உ‌த்தரவு வரு‌ம் வரை‌யி‌ல் மூடு‌ம்படி த‌மிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டது. 

பிப். 3 

இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை உருவாக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. செ‌ய‌ற்குழு‌வி‌ல் ‌தீ‌‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது. 

பிப். 4
 
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்த மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 
காக்கி - கறுப்பு மோதல்!

பிப். 19 

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டத்தில்,  நீதிமன்ற வளாகமே போர்க்களமானது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட பலரும் காயமடைந்தனர். இது, மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பிப். 20

இந்திய இறையா‌‌ண்மை‌யைக் குலைக்கும் வகையில் பே‌சியதாக வழக்கு பதிவு செய்து, காவ‌ல்துறை‌யினரா‌ல் தேட‌ப்ப‌ட்டு வ‌ந்த  திரைப்பட இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் நெ‌‌ல்லை மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ர் மு‌ன்பு சர‌ண் அடை‌ந்தா‌ர்.

மார்ச் 9 

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.

மார்ச் 19 

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு  ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மார்ச் 26  

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது என்று பா.ம.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

ஏப். 23

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெகுவாக ஆதரவைப் பெற்றது. 

ஏப். 27 

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி, தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி சென்னையில் திடீரென காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இலங்கையில் இருந்து சாதகமான  தகவல் வந்துள்ளது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்ததை அடுத்து, அவர் தனது உண்ணாவிரதத்தை மதியம் முடித்துக் கொண்டார். 

மே 13 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இலங்கைப் பிரச்னையை முன்வைத்து பல்வேறு கட்சிகளும் பிரசாரத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. அணி 12 தொகுதிகளை கைப்பற்றியது. 

மே 28 

மத்திய அமைச்சர்களாக தி.மு.க.வின் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன்  உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

மே 29
 
தமிழகத்தின் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  கவர்னர் மாளிகை வெளியிட்டது. 

ஜூன் 25  

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாட்டு தமிழர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண  பொருட்களுடன் 'வணங்காமண்' என்ற கப்பலை அனுப்பினர். ஆனால், அந்த கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்ததால், அந்த கப்பல் சென்னை அருகே நிறுத்தப்பட்டது.

இந்த கப்பலை இலங்கையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தின. இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர்  கருணாநிதி கடிதம் எழுதினார். இந்த நிலையில், வணங்காமண் கப்பல் பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது.

ஜூலை 23

இந்தியாவில் முதல் முறையாக ஒரு கோடி பேருக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஜூலை 29 

அ.தி.மு.க.வில் இருந்து நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலர் 'அனிதா'  ராதாகிருஷ்ணன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.  

ஆக. 5  

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை  விதித்து மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஆக. 22 

தமிழகத்தில் இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு  நடந்த இடைத்தேர்தலில் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி வே‌ட்பாள‌ர்க‌ள் வெ‌ற்‌றி பெ‌‌ற்றனர். 

ஆக. 26
 
தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன் பின், சமச்சீர் கல்வி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கு அவ்வப்போது அரசு தரப்பில் இருந்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஆண்டு முழுவதுமே சமச்சீர் கல்வி குறித்த விவாதங்கள் நீடித்தன. 

செப். 10
 
இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்  செயலாளர் ராகுல் காந்தி, தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்தார். சென்னையில் நிருபர்களை சந்தித்தவர்,  "இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அ‌ங்கு‌ள்ள தமிழர்கள் உரிமை இலங்கை மண்ணில்  நிலைநாட்ட காங்கிரஸ் பாடுபடும்," என்றார் ராகுல் காந்தி.  தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பினால் வரவேற்போம் என்று ராகுல் காந்தி தெரிவித்ததும் தலைப்புச் செய்திகளாயின.

செப். 14 

நடிகர் விஜய் காங்கிரஸில் இணைவார் என்று வெளியான வதந்திகள் முடிவுக்கு வந்தது. தற்போதைக்கு அரசியலில் குதிக்கும்  எண்ணம் இல்லை என்றும், ஒருவேளை எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட்டாலும் ரசிகர் மன்றங்களுடன் கலந்து ஆலோசித்தப்  பிறகே முடிவெடுப்பேன் என்றும் நடிகர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.  

செப். 16 

தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.பி.,க்களும் தங்களுக்கு தமிழில் கேள்வி எழுப்பவும், பதில் தரவும் அனுமதி  தரவேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க முடியாது என்று மக்களவையின் தலைமைச் செயலர் பி.டி.டீ. ஆச்சாரி தெரிவித்தார்.

செப். 23

முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை குறித்து ஆய்வு செய்வதற்கு கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி  வழங்கியது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அக். 3
 
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு  நிரந்தர குடியுரிமை வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக  தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். 

அக். 4 

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக, பா.ம.க. நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

அக். 7
 
முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ஆணைக்கு தடை கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

அக். 9
 
அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதிக்கு 'உலக கலை படைப்பாளி' விருது வழங்கப்பட்டது.

 அக். 10
 
தமிழக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் கொண்ட குழு டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை புறப்பட்டு சென்றது. அங்கு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைபற்றி அறிய இந்தக்குழு சென்றது. இந்தக்குழுவில் எதிர்க்கட்சியினர் இல்லாதது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், இது அரசு குழுவல்ல, தி.மு.க. கூட்டணி கட்சி குழு என்று முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்தார்.

அக். 14 

ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் செய்த எம்.பி.க்கள் குழு சென்னை திரும்பியது. 15 நாட்களுக்குள் 50 ஆயிரம் தமிழர்களை  சொந்த இடம் திரும்ப ஏற்பாடு செய்திருப்பதாகவும், மற்ற 2 லட்சம் பேர் படிப்படியாக சொந்த ஊர்களில்  குடிஅமர்த்தப்படுவார்கள் என்றும் அதிபர் ராஜபக்சே தமிழக குழுவிடம் உறுதி அளித்திருப்பதாக முதலைமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.  

அக். 16
 
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய  நிறுவனத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில், மாநாட்டை ஜுன் 24-ம் தேதி முதல் 4 நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அக். 17
 
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 30 பேர் கருகி இறந்தனர். இது தொடர்பாக  அதிகாரிகள் - காவல்துறையினர் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அக். 18 

சென்னையில் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கை தமிழர் நலவாழ்வுக்கு மேலும் ரூ.500 கோடி நிதி உதவியை மத்திய அரசு வழங்கும் என்று கூறினார்.

அக். 19 

முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணியை கேரள அரசு தொடங்கியது. கேரள அரசின்  நிலையை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசை கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் வற்புறுத்தினார். இதற்கு முதலமைச்சர்  கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
 
அக். 29
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் மோதல் தொடர்பான வழக்கில், சென்னையின் அப்போதைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட  4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக். 31
 
இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோயிலில் வழிபாடு செய்தார். இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள்  என்று நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.

நவ. 2
 
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களின் மேம்பாட்டுக்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டது. முதலமைச்சர்  கருணாநிதி தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நவ. 8

நீலகிரியில் அதிகபட்சமாக 32 சென்டி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்தது. இதில் மண்சரிவு மற்றும் விபத்துகளில் 14 பேர்  பலியானார்கள். ஊட்டியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதில் 29 பேர் பலியானார்கள்.

நவ. 12
 
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் துயரங்களை களைய ரூ.100 கோடி நிதி ஒதுக்குவதென்று அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.


நவ. 12

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

டிச. 3 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி வேன் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குளானதில் 9 குழந்தைகள்  பலியாகினர். இந்த விபத்தின் போது 11 குழந்தைகளைக் காப்பாற்றிய சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநில முழுவதும் துயரத்தில் ஆழ்த்தியது.

டிச. 5 

சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையேயான மோதல் வழக்கில், 4 போலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

டிச. 7 

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடப்படும் என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து  செய்ய மாட்டோம் என்றும் மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

டிச. 10 

கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய கடல் மீன்பிடி தொழில்  சட்ட மசோதாவை, மத்திய அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்ய இருந்தது.
இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இதையடுத்து, இந்த மசோதாவை நடப்பு  கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட மாட்டாது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் அறிவித்தார்.

டிச. 23
 
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. 

டிச.26

தஞ்சையில் உலகத் தமிழர் பேரவையின் 7ஆம் ஆண்டு நிறைவு விழாவும், ஈழத் தமிழர் வாழ்வுரிமை இரண்டு மாநாடும் தொடங்கி நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior