பண்ருட்டி:
பண்ருட்டி அருகே திங்கள்கிழமை அதிகாலை அரசு மற்றும் தனியார் சொகுசு பஸ் ஆகியவை மோதிக்கொண்ட விபத்தில், இரு பஸ்களின் ஓட்டுனர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பஸ்களில் பயணம் செய்த 35 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு தனியார் சொகுசு பஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு 40 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பஸ்ûஸ தஞ்சாவூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (58) ஓட்டி வந்தார். இதேபோல் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. இதை பாலசுப்பிரமணியன் ஓட்டி வந்தார். இவ்விரு பஸ்களும் திங்கள்கிழமை அதிகாலை பண்ருட்டி சித்திரைச்சாவடி அருகே வரும் போது நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அரசு மற்றும் தனியார் சொகுசு பஸ் ஓட்டுனர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பஸ்களில் பயணம் செய்த காட்டுமன்னார்கோவில் புடையூர் கிராமத்தைச் சேர்ந்த நடத்துனர் குப்புசாமி (50), தஞ்சாவூர் சுப்பிரமணியன் (60), பட்டுக்கோட்டை ஆண்டாள் (60), கும்பகோணத்தைச் சேர்ந்த சுகன்யா (19), குமார் (14) உள்ளிட்ட 35-ம் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி. பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக