சிதம்பரம் :
கோவில்களில் தமிழில் அர்ச்சனை பெயரளவில் பெயர் பலகையில் மட்டுமே உள்ளது. அதை நடைமுறைபடுத்த வேண்டும் என குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார். சிதம்பரத்தில் மூன்று நாள் நடந்த 12வது உலக சைவ மாநாட்டின் நிறைவுரையாக குன்றக்குடி ஆதீனம் பேசியதாவது: சைவம் என்பது வெறும் சமயம், தத்துவம் மட்டுமல்ல, வாழ்க்கை முறை. சைவ சமயம் கடைபிடிக்கப்படாததால், வீடுகளில் விருந்தோம்பல், தங்க வைப்பது போன்ற மரபுகள் மறைந்து விட்டன. குடும்பங்கள் இன்றைக்கு வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டன. இதனால் உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் அதிகரித்துவிட்டன. குடும்ப வாழ்க்கை முறைகள் மாறி வருகின்றன. இன்றைய திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை. ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. துணையை பிரிந்த விலங்கினங்கள் கூட தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் உண்டு. ஆனால், கணவரை பிரிய மனைவியும், மனைவியை பிரிய கணவரும் விவகாரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கின்ற நிலை இன்றைக்கு உள்ளது. எனவே, பெரியபுராணம் காட்டிய வாழ்க்கை முறைக்கு நாம் மாற வேண்டும். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வழக்கம் 1961ம் ஆண்டு தமிழகத்தில் அரங்கேறியது. அப்போது, முதல்வராக இருந்த பக்தவச்சலத்திடம் 63 அறிஞர்கள் நேரிடையாக சென்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முதல் முறையாக தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. அது பெரும்பாலும் இன்று கோவில்களில் பெயரளவில் பெயர் பலகையில் மட்டுமே உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. கோவிலில், தமிழில் அர்ச்சனை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு குன்றக்குடி ஆதீனம் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக