கடலூர் நகராட்சியில் எந்த திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், அதிகாரிகள் பணம் இல்லை என்கிறார்கள் என்று திங்கள்கிழமை நடந்த நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
கடலூர் நகராட்சியின் இயல்புக் கூட்டம் நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:
துணைத் தலைவர் தாமரைச் செல்வன்:
சபையில் உறுப்பினர்கள் பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டத்தில் தோண்டப்பட்ட சாலைகள் மாதக் கணக்கில் போக்குவரத்துக்குத் தகுதி அற்றதாகக் கிடக்கின்றன. குழந்தைக் காலனியில் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்.
ராதாகிருஷ்ணன்:
நகராட்சியில் அண்மைக் காலமாக எந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், அதிகாரிகள் பணம் இல்லை என்கிறார்கள். ரூ.5 லட்சம் திட்டத்துக்குப் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள், ரூ.45 லட்சத்துக்கான திட்டத்துக்கு உடனே அனுமதி அளிக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்.
ராஜா: நகராட்சியில் திட்டங்களுக்குப் பணம் இல்லை என்கிறார்கள். ஆனால் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, ரூ.12 ஆயிரம் ஒதுக்குகிறார்கள்.
தலைவர் தங்கராசு:
பணம் இல்லை என்று அதிகாரிகள் உறுப்பினர்களிடம் கூறுவது முறையல்ல.
திட்டத்தைப் பற்றி பேசினால் உறுப்பினர்களை என்னிடம் தெரிவிக்குமாறுதானே அதிகாரிகள் சொல்ல வேண்டும். நிதியைப் பெருக்க, வரி போடாத வீடுகளுக்கு வரி விதிப்பு செய்யுங்கள் என்றால் அதிகாரிகள் செய்வதில்லை.
ஆனந்த்:
நகரில் விஷக்காய்ச்சல் அதிகமாகப் பரவி இருக்கிறது. நகராட்சி மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.÷தலைவர் தங்கராசு: மருத்துவ முகாம்கள் நடத்தலாம்.
எதிர்க்கட்சித் தலைவர் குமார் (அ.தி.மு.க.):
நகரில் பூங்காக்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.26 கோடி ஒதுக்கியும் பயன் இல்லை. நகரில் சிக்குன்-குனியா காய்ச்சல் அதிகமாகப் பரவி உள்ளது. சாக்கடை தேக்கமும், கொசுத் தொல்லையுமே இதற்குக் காரணம். நகராட்சி செயல் இழந்து விட்டது.
வி.எஸ்.எல்.குணசேகரன்: ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் என்ன ஆயிற்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.
முத்து: நகரில் கட்டப்பட்டு உள்ள சாக்கடைக் கால்வாய்கள் ஒன்றுக் கொன்று மட்டம் சரியில்லை. இதனால் சாக்கடை ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து விட்டது. ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும். பாதாளச் சாக்கடை திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தலைவர் தங்கராசு:
அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாகச் சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தலாம். பாதாள சாக்கடைத் திட்டத்தில் 148 கி.மீ. நீளச் சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 72 கி.மீ. நீளச் சாலைகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளன. 22 கி.மீ. நீளம் மட்டுமே புதிய சாலை அமைக்கப்பட்டது. சர்தார்: போலி ரேஷன் கார்டுகள் என்று உண்மையான கார்டுகளையும் ரத்து செய்து விட்டனர். எனது வார்டில் 1,100 கார்டுகளில் 250 கார்டுகளை ரத்து செய்து விட்டனர். கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டு உள்ள அடையாள அட்டைகளில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக அச்சிடப் படவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக