பண்ருட்டி:
கெடிலம் ஆற்றுப் பாசன பகுதியில் உள்ள வருவாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நீர், நிலவளத் திட்டத்தின் மூலம் மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கப்படுவதாக பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் கெடிலம் நதி மேம்பாடு நீர், நிலவளத் திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்பட உள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் கெடிலம் ஆற்றுப் பாசன பகுதியில் உள்ள வருவாய் கிராம விவசாயிகளுக்கு திசு வளர்ப்பு வாழை, கொய்யா, கத்தரி, வெண்டை விதைகள் மற்றும் தேவையான இடுபொருள்கள் மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் மனம்தவிழ்ந்தபுத்தூர், நத்தம், சிறுகிராமம், வீரப்பார், திருவாமூர், எலந்தம்பட்டு, செம்மேடு, சேமக்கோட்டை, மணப்பாக்கம், சிறுவத்தூர், எல்.என்.புரம், பூங்குணம் மற்றும் செட்டிப்பட்டரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சேர்ந்து பயனடையலாம். பயன்பெறும் விவசாயிகள் 10 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது நில புலஎண் நீர், நிலவள பாசன பகுதிக்குள் வருகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு, பண்ருட்டி தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக