நெய்வேலி :
தமிழகத்தின் மின் தேவை மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும் என என்.எல்.சி., சேர்மன் அன்சாரி தெரிவித்தார்.
என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியவர்களுக்கு இரண்டு நாள் லோக் அதாலத் மூலம் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கம்மாபுரம், உய்யகொண்டராவி, வளையாதேவி கீழ்பாதி, கோட்டகம் மற்றும் பெரியாகுறிச்சி ஆகிய கிராமங்களிலிருந்து 290 ஏக்கர் நிலங்களுக்கு 486 வழக்குகள் முடிக்கவும், இதன் மூலம் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. நேற்று மாலை இழப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்ச்சியில் என்.எல்.சி., சுரங்கத்துறை இயக்குனர் சுரேந்தர் மோகன், நீதிபதி ரவீந்திரன், முன்னாள் நீதிபதி ஆறுமுகம், நில எடுப்புத் துறை முதன்மை பொது மேலாளர் ராமலிங்கம், சமூக சேவகி வேம்பு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
முதன்மை விருந்தினர் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கி பேசியதாவது:
இந்தியாவின் எந்த சுரங்க நிறுவனமும் வழங்குவதைவிட என்.எல்.சி., மட்டுமே அதிக இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறது. நானும் ஒரு விவசாயி என்ற முறையில் எனது சொந்த நிலத்தை பிறருக்கு வழங்கும் போது அவர்களுக்கு ஏற்படும் வலி எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் இந்த நல்ல செயலால் என்.எல்.சி., மேலும் அதிகமாக மின் உற்பத்தி செய்து கோடிக் கணக்கான வீடுகளில் ஒளியேற்றும்.மேலும் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கும் வகையில் இதுவரை 3 சென்ட் என்ற அளவில் இருந்த மனை பிரிவு இனி 5 சென்ட் பரப்பளவாக உயர்த்தப்படும். நெய்வேலிக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பள்ளி கட்டடங்கள் விளையாட்டு மைதானங்கள். குடிநீர், சாலை போன்ற எந்த வசதிகளை கேட்டாலும் என்.எல்.சி., செய்து தர தயாராக உள்ளது. அதுமட்டுமின்றி என்.எல்.சி., மூலம் தமிழகத்தின் மின் தேவை மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும் இவ்வாறு அன்சாரி பேசினார்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக