உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

சுட்டெரிக்கும் கோடையை சுவையாக்கும் பயிற்சிகள்


கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றுவரும் கோடைகால நீச்சல் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள சிறுவர்கள்.
 
கடலூர்:
 
               ஏப்ரல் 19-ம் தேதியுடன் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வீடுகளில் குழந்தைகளின் கூட்டம் கலகலப்புடன் குதூகலிக்கத் தொடங்கி இருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பள்ளிக்கூட வளாகங்களில், கட்டாயமாகக் கட்டிப் போடப்பட்டு இருந்த மாணவர்களுக்கு, கோடைக்கால சுதந்திரம் வந்துவிட்டது. பெற்றோருக்கு ஆண்டின் பெரும்பாலான நாள்களில் காலை 5 மணிக்கே எழுந்து குழந்தைகளுக்கு உணவு தயாரித்து, அவர்களை பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்தும் சிரமங்களில் இருந்து இந்த கோடைக் காலத்தில் கொஞ்சம் ஓய்வும், இடைவேளையும் கிடைத்து உள்ளது.
 
                  ஆனாலும் சிறுவர்கள், இளைஞர்கள் முன்னேற்றத்தில் பெற்றோர்களிடம் புதிய சிந்தனைகளும், புதிய கலாசாரமும் உருவாகி உள்ளது. கோடைக்காலம் எத்தனை அளவுக்குத் தகித்தாலும், அந்த சிறிய கால அவகாசத்தில் ஏதேனும் புதிய விஷயங்கள், அறிவைப் பெருக்கிக் கொள்ளும் புதிய பயிற்சிகள், உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள புதிய வழிமுறைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை இந்த சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதன் வெளிப்பாடுதான், கோடைக் காலத்தில் புதிய கணினிப் பயிற்சிகள், யோகா, ஆங்கில பேச்சாற்றல், நினைவாற்றல் பயிற்சி, வரைகலைப் பயிற்சிகள், விளையாட்டுப் பயிற்சிகள் என்று இளைஞர்களையும், சிறுவர்களையும் ஈர்த்துக் கொண்டு இருக்கும் பயிற்சிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதற்கென திடீரென முளைத்த நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்களையும் வெளியிட்டு மக்களை ஈர்த்து வருகின்றன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பல கணினிப் பயிற்சி நிறுவனங்கள் மாதிரி கேள்வித் தாள்களை வழங்குகின்றன. 
 
                  கோடைக்கால சிறப்புப் பயிற்சிக்காக மாணவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். தேர்வு முடிந்ததும், மாணவர்கள் அந்த பயிற்சியில் சேர்ந்து விடுகிறார்கள். இதற்காகக் கணிசமான தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.விளையாட்டுப் பயிற்சிகளைப் பொறுத்தவரை, கடலூர் அண்ணா விளையட்டு அரங்கத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்களால் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகள், மாணவர்களையும் இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்து இருக்கிறது. இங்குள்ள நீச்சல் குளம் எப்போதும் நிரம்பி வழிகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நேரங்கள் ஒதுக்கப்பட்டு, பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நீச்சல் பயிற்சியாளர்கள் தகுந்த பயிற்சி அளிக்கிறார்கள். நாளொன்றுக்கு 50 பேருக்குக் குறையால் வந்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். நடைப் பயிற்சிக்கு என இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் சிறப்பு நடைபாதையில் நடைப் பயிற்சிக்காக வருவோர் எண்ணிக்கை, கோடைக்காலத்தில்  இரு மடங்காக அதிகரித்து இருப்பதாக நடைப் பயிற்சியாளர் சங்கத் தலைவர் பரமசிவம் தெரிவித்தார். 
 
                டென்னிஸ் விளையாட்டில் கோடைக்கால சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  விளையாட்டில் உலகத் திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தில், கல்வி மாவட்ட அளவில் ஏற்கனவே விளையாட்டுகளில் திறன் படைத்தவர்களுக்கு பயிற்சி முகாம்கள், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கிலும், விருத்தாசலம் விளையாட்டு அரங்கிலும் திங்கள்கிழமை தொடங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தெரிவித்தார். 30-ம் தேதி வரை இந்த பயிற்சி முகாம்கள் அனுபவம் மிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். காலை 6-30 மணி முதல் 8-30 மணி வரை நடத்தப்படும் இந்த பயிற்சிக்கு வருவோருக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்படுகிறது. தட களம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை கோடைக் காலத்திலும் தொடர்ந்து பாடப் புத்தகங்களுக்குள் புதைந்து கிடக்கச் செய்யும், சிறப்பு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. 3 மாதத்திலேயே தேர்வுக்கு ஏற்ற வகையில், ஓராண்டு பாடத் திட்டத்தை முடித்துக் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்து சில ஆசிரியர் குழுக்களும் பயிற்சியைத் தொடங்கிவிட்டனர். அரசுப் பள்ளிகள் கூட இந்த ஆண்டு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை இப்போதே பள்ளிகளுக்கு வரவழைத்து சிறப்புப் பயிற்சிகளைத் தொடங்கி இருக்கின்றன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior