உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

குடியேற்றத் துறையின் கிடுக்கிப்பிடியால் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை குறைகிறது

                 வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் தரகர்கள் மற்றும் ஏஜன்டுகள் மீது, குடியேற்றத் துறையின் பிடி இறுகியிருப்பதால், 2008-09 ஐ விட, 2009-10ல் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

               கடந்த ஆண்டில், சென்னையிலுள்ள குடியேற்றத் துறை அதிகாரி சேகர், அவரது ஐந்து உதவியாளர்களுடன் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, வெளிநாடுகளுக்கு வேலைக்காக தொழிலாளர்களை போலி ஆவணங்களைத் தயாரித்து அனுப்பி வைக்கும் தரகர்கள் மற்றும் ஏஜன்டுகள் மீதான குடியேற்றத் துறையின் பிடி இறுகியிருக்கிறது. தற்போது, அத்துறையின் தலைவராக இருக்கும் ஜெய்சங்கர் கூறுகையில், 'தொழிலாளர்களில் பெரும்பாலோர் தாங்கள் போகும் நாடு எது என்பதைக் கூட அறிந்திருப்பதில்லை. அவர்களுக்கு இது குறித்து முழு விவரங்களையும் இப்போது அளித்து வருகிறோம். 'இதற்காக தனியாக ஒரு கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்துகிறோம். தொழிலாளர்களை அழைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகள் மற்றும் இலவச விமான டிக்கெட் இவை கொடுத்தாக வேண்டும் என்பது அடிப்படை விதி. இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் நாங்கள் அனுமதி அளிப்பதில்லை' என்று தெரிவித்தார்.

                         தற்போது சென்னையில் 200 பதிவு செய்யப்பட்ட ஏஜன்டுகள் இயங்கி வருகின்றனர். சமீபகாலம் வரை, அவர்கள் முறையான சோதனை செய்யாமல், தினசரி 400 பாஸ்போர்ட்டுகளுக்கு அனுமதி வாங்கி வந்தனர். ஆனால், தற்போது புதிய விதிமுறைகள் மூலம் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், 2008-09ல் குவைத்துக்கு 21 ஆயிரத்து 203 பேர் அனுப்பப்பட்டனர். ஆனால், முறையான சோதனைகளுக்குப் பின் 2009-10ல் 9,550 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்பவர்களில் முதலிடத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் தான் உள்ளனர். இதையடுத்து, மதுரை, ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் சென்னை இடம் பெற்றுள்ளன. வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோர் அந்நாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, புதிய குடியேற்ற சட்டத்தின் படி அவர்கள் அரசில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்குச் செல்பவர்கள் இதைப் பின்பற்ற வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior